சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் பொதுமக்கள் அவதி


சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் பொதுமக்கள் அவதி
x

சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டாவது பெரிய நகராட்சியாக அறந்தாங்கி நகராட்சி உள்ளது. அறந்தாங்கி நகராட்சி உட்பட்ட பட்டுகோட்டை, காரைக்குடி, புதுக்கோட்டை, பேராவூரணி சாலையிலும், அக்னி பஜார், எல்.என்.புரம் உள்ளிட்ட நகர் பகுதி முழுவதும் உள்ள சாலைகளில் மாடு, ஆடுகள் அதிக அளவில் சுற்றி வருகிறது. இதனால் அறந்தாங்கி நகர் பகுதியில் எதாவது ஒரு பகுதியில் நாள்தோறும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மாட்டின் மீது மோதி கீழே விழும் சம்பவம் நடந்து கொண்டேதான் உள்ளது. இப்படி சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள் மீது மோதி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவமும் அடிக்கடி நடந்து வருகிறது. இப்படி சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை, மாட்டின் உரிமையாளர்கள் பாதுகாக்காமல் விட்டு விடுகின்றனர். இது குறித்து நகராட்சி நிர்வாகம் பலமுறை மாட்டின் உரிமையார்களை எச்சரிக்கையுடன் கண்டித்து உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன் நூற்றுக்கணக்கான மாடுகளை நகராட்சி நிர்வாகம் சிறைப்பிடித்து கும்பகோணம் கோசாலைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் மாட்டின் உரிமையாளர்கள் கோசாலையில் அபராதம் செலுத்திவிட்டு மாடுகளை மீட்டு கொண்டு வந்து அறந்தாங்கி நகர் பகுதியில் உள்ள சாலைகளில் சுற்றித்திரிய வைக்கின்றனர். இதனால் சாலைகளில் மாடுகள் எந்த நேரமும் சுற்றி வருகிறது. இரவு சாலைகளில் தூங்கும் மாடுகள் காலை 9 மணி வரை சாலையில் படுத்துகிடக்கிறது. இதனால் காலையில் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள், அலுவலர்கள் பெரும் அச்சுறுத்தலில் செல்ல வேண்டி உள்ளது. மேலும் விபத்துகளும், உயிர் பலிகளும் நடக்காமல் இருக்க மாவட்ட நிர்வாகம் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story