அரசு பஸ்சை மறித்து பொதுமக்கள் மறியல்


அரசு பஸ்சை மறித்து பொதுமக்கள் மறியல்
x

அரசு பஸ்சை மறித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை

வடகாடு அருகே நெடுவாசல் மேற்கு அரண்மனைத்தோப்பு பகுதியை சேர்ந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் அறந்தாங்கி, புதுக்கோட்டை, பேராவூரணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல அரசு பஸ்களை மட்டுமே நம்பியுள்ளனர். புள்ளான்விடுதி, நெடுவாசல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆவணம் கைகாட்டி நோக்கி செல்ல அறந்தாங்கி பணிமனையில் இருந்து, தடம் எண் 18-ம் மற்றும் பேராவூரணியில் இருந்து இயக்கப்படும் தடம் எண் A-2 ஆகிய அரசு பஸ்களில் பயணித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு ஆவணம் கைகாட்டியில் இருந்து புள்ளான்விடுதி நோக்கி வந்த தடம் எண் 18-ம் அரசு பஸ்சில் பயணிகளை புள்ளான்விடுதி வரை செல்லாது எனக்கூறி டிரைவர், கண்டக்டர் நெடுவாசல் கிழக்கு பகுதியில் இறக்கி விட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பெண்கள் மற்றும் குழந்தைகள் சாலை வழியாக இரவில் தனியாக நடந்து வந்துள்ளனர். ஆனால் புள்ளான்விடுதி செல்லாது என கூறப்பட்ட பஸ் பொதுமக்கள் நடந்து வந்த பின்னர் புள்ளான்விடுதி நோக்கி இயக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்கள் புள்ளான்விடுதி நோக்கி வந்த அந்த பஸ்சை மறித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அப்பகுதியை சேர்ந்த பெண்கள், பஸ்சில் ஏற்ற மறுப்பதோடு, தரக்குறைவாக தங்களை திட்டுவதாக கூறி டிரைவர் மற்றும் கண்டக்டர் மீது புகார் கூறினர். இதையடுத்து அங்கு வந்த அறந்தாங்கி போக்குவரத்து பணிமனை அதிகாரிகள் டிரைவர், கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து அனைவரும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story