ஆதாரில் செல்போன் எண்ணை இணைக்க குவிந்த பொதுமக்கள்
கம்பம் நகராட்சி இ-சேவை மையத்தில் ஆதாரில் செல்போன் எண்ணை இணைக்க பொதுமக்கள் குவிந்தனர்.
தமிழகம் முழுவதும் தகுதி வாய்ந்த மகளிர்களுக்கு கடந்த வாரம் கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இதற்காக அவரது செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது. ஆதார் கார்டில் செல்போன் எண்ணை இணைக்காத நபர்கள் மற்றும் வங்கி கணக்கு, ஆதார் காா்டில் வெவ்வெறு செல்போன் எண்கள் உள்ளவர்களுக்கு குறுஞ்செய்தி வரவில்லை. இந்நிலையில் மகளிர் உரிமைத்தொகை கிடைக்காமல் மீண்டும் விண்ணப்பிப்பவர்கள் ஆதார் கார்டில் செல்போன் எண்ணை கட்டாயம் இணைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நகராட்சி இ-சேவை மையங்கள், உத்தமபாளையம் தாலுகா அலுவலங்களில் செயல்படும் இ-சேவை மையங்களில் ஆதார் எண்ணில் செல்போன் எண் இணைப்பதற்காக பொதுமக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
அதன்படி, கம்பம் நகராட்சி அலுவலகத்தில் செயல்படும் இ-சேவை மையத்தில் நேற்று ஆதார் கார்டில் செல்போன் எண்ணை இணைப்பதற்காக பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இங்கு கம்பம், கூடலூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். சிலருக்கு இடையே லேசான தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதனால் குழந்தைகளுக்கான ஆதார் பதிவு, முகவரி மாற்றம், கைரேகை பதிவு உள்ளிட்ட பணிகள் முடங்கின. எனவே மகளிர் உரிமைத்தொகைக்கான ஆதார் கார்டில் செல்போன் எண்ணை பதிவு செய்வதற்கு தனிப்பிரிவு ஏற்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.