தொடர் விடுமுறை எதிரொலி: பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் குவிந்த பொதுமக்கள் குடும்பத்துடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்
தொடர் விடுமுறை காரணமாக பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் குவிந்த பொதுமக்கள் குடும்பத்துடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
பரங்கிப்பேட்டை,
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே இயற்கை எழில் கொஞ்சும் பிச்சாவரம் சுற்றுலா மையம் அமைந்துள்ளது. இங்குள்ள சுரபுன்னை காடுகளை காண கடலூர் மாவட்டமின்றி வெளிமாவட்ட, வெளி மாநில, வெளி நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் பண்டிகை விடுமுறை நாட்கள் மற்றும் வார விடுமுறை நாட்களில் இங்கு வந்து படகுகளில் சென்று இயற்கை அழகை ரசித்து செல்வார்கள்.அந்த வகையில் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் சுதந்திர தினம் என தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டாதால் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என்பதால் வழக்கத்தை விட ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் இங்கு வந்து நீண்டவரிசையில் காத்திருந்து டிக்கெட் எடுத்து படகுகள் மூலம் சவாரி செய்து மகிழ்ந்தனர். அப்போது அவர்கள் சுரபுன்னை காடுகள் மற்றும் சுற்றுலா மைய வளாகத்தில் உள்ள கடல் கன்னி சிலைகள் முன்பு நின்று செல்பி எடுத்துக் கொண்டனர். இதனால் இன்று பிச்சாவரம் சுற்றுலா மையம் பரபரப்புடன் காணப்பட்டது.