குப்பைக்கிடங்கில் இருந்து வெளியேறிய புகைமூட்டத்தால் மக்கள் அவதி


குப்பைக்கிடங்கில் இருந்து வெளியேறிய புகைமூட்டத்தால் மக்கள் அவதி
x
தினத்தந்தி 18 Aug 2023 3:00 AM IST (Updated: 18 Aug 2023 3:00 AM IST)
t-max-icont-min-icon

பழனியில் குப்பைக்கிடங்கில் இருந்து வெளியேறிய புகைமூட்டத்தால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

திண்டுக்கல்

பழனி பெரியப்பாநகரில் நகராட்சி குப்பைக்கிடங்கு உள்ளது. நகர் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு தரம் பிரிக்கப்படுகிறது. பின்னர் மக்கும் குப்பைகள் உரமாகவும், மக்காத குப்பைகள் குவித்தும் வைக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் கடந்த 10-ந் தேதி நகராட்சி குப்பைக்கிடங்கில் திடீரென்று தீப்பிடித்தது. தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைத்தனர். இருந்தாலும் கடந்த 2 நாட்களாக குப்பைக்கிடங்கில் இருந்து புகைமூட்டம் வெளியேறியபடி இருந்தது. இதனால் சத்யாநகர், பெரியப்பாநகர் பகுதி மக்கள் மற்றும் தக்காளி மார்க்கெட் பகுதியில் புகை மண்டலமாக காட்சி அளித்தது. அந்த பகுதியை சேர்ந்த வியாபாரிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர். இதையடுத்து கிடங்கில் பற்றி எரியும் தீயை முழுமையாக அணைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.

இதைத்தொடர்ந்து நேற்று பழனி நகராட்சி ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் குப்பைக்கிடங்கிற்கு வந்தனர். அங்கு குப்பையில் பிடித்த தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். ஆனாலும் கிடங்கில் இருந்து புகைமூட்டம் வெளியேறியபடி இருந்தது.

இதுகுறித்து பொதுமக்களிடம் கேட்டபோது, குப்பைக்கிடங்கிற்கு உள்ளே மர்ம நபர்கள் புகுந்து தீ வைக்கும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. அதை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story