அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழா
அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழா நடைபெற்றது
சிங்கம்புணரி
சிங்கம்புணரி அருகே மருதிபட்டியில் உள்ள மருது அய்யனார் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாத புரவி எடுப்பு விழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான இந்த விழா மிக சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக கடந்த மாதம் 19-ந் தேதி சதுர்வேத மங்கலத்தில் உள்ள குயவர்களிடம் புரவி செய்ய பிடிமண் கொடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து புரவி பொட்டலில் 2 அரண்மனை புரவி மற்றும் 9 நேர்த்தி கடன் புரவிகள் செய்யப்பட்டது. இவற்றை சதுரவேத மங்கலத்தில் இருந்து மருதிபட்டி புரவி திடலுக்கு பக்தர்கள் சுமந்து வந்தனர். அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் புரவி திடலில் இருந்து மருதிபட்டி கச்சேரி திடலுக்கு பல்வேறு அலங்காரம் செய்யப்பட்ட புரவிகள் கொண்டு வரப்பட்டது. அதைத்தொடர்ந்து கச்சேரி திடலில் இருந்து மருது அய்யனார் கோயிலுக்கு அரண்மனை புரவிகள் முன் செல்ல நேர்த்திக்கடன் புரவிகள் ஒன்றன்பின் ஒன்றாக மருது அய்யனார் கோயிலுக்கு எடுத்து செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மருதிபட்டி மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.