புரவி எடுப்பு திருவிழா
கே.புதுப்பட்டி அருகே புரவி எடுப்பு திருவிழா நடைபெற்றது.
அரிமளம் ஒன்றியம் மேல்நிலைவயல் ஊராட்சி கே.புதுப்பட்டி அருகே பூனையன்குடியிருப்பு, உசிலம்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த அய்யனார் கோவிலில் புரவி எடுப்பு திருவிழா நடைபெற்றது. இதையொட்டி அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு 7 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டது. பின்னர் பட்டு மற்றும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு பஞ்சமுக தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து பூனையன்குடியிருப்பு, உசிலம்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குதிரை பொட்டலுக்கு சென்று குதிரை சிலைகளை வழிபாடு செய்தனர். பின்னர் அங்கிருந்து தங்களுடைய தோள்களில் குதிரை சிலைகளை சுமந்து கொண்டு ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். பெண்கள் காளை, மதலை, நாகம் உள்ளிட்ட மண்ணால் செய்யப்பட்ட பொம்மைகளை கையில் தூக்கி வந்து தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். முன்னதாக மண்ணால் ஆன குதிரை மீது பூசாரி அய்யனார் வேடமிட்டு எழுந்தருளி வந்து பக்தர்களுக்கு அருள் வாக்கு கூறினார். இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். குதிரை சிலைகளை கோவிலுக்கு கொண்டு சென்று வழிபட்ட பின்னர் ஒரு குதிரை சிலையை கீழாநிலைக்கோட்டை அரியநாயகி அம்மனுக்கு ஊர்வலமாக எடுத்துச்சென்று கோவிலில் வைத்து வழிபட்டனர்.