பவுர்ணமி நாட்களில் கார்கள் நிறுத்த 'பார்க்கிங்' வசதி ஏற்படுத்த வேண்டும்


பவுர்ணமி நாட்களில் கார்கள் நிறுத்த பார்க்கிங் வசதி ஏற்படுத்த வேண்டும்
x

திருவண்ணாமலையில் பவுர்ணமி நாட்களில் கார்கள் நிறுத்த பார்க்கிங் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் பவுர்ணமி நாட்களில் கார்கள் நிறுத்த பார்க்கிங் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடிப்படை வசதி இல்லை

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வதற்காக வருகின்றனர்.

அதன்படி நேற்று ஆவணி மாதம் பவுர்ணமியை முன்னிட்டு உள்ளூர், வெளிமாவட்டம், வெளி மாநிலத்தை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் வந்தனர்.

இதில் அவரவர் வசதிக்கு ஏற்ப பஸ்களிலும், ரெயிலிலும், வசதி படைத்தவர்கள் கார் மற்றும் வேன், தனியார் பஸ் போன்றவற்றில் திருவண்ணாமலைக்கு வந்திருந்தனர்.

அவ்வாறு கிரிவலம் வந்து செல்லும் பக்தர்களால் அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோவில்கள் மூலம் பல லட்சம் ரூபாய் காணிக்கை கிடைக்கிறது.

இருப்பினும் திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிடம், வாகனம் நிறுத்தும் இடம் என எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாமல் இருந்து வருகிறது.

நேற்று இரவு பவுர்ணமி கிரிவலத்தின் போது கிரிவலப்பாதையில் உள்ள பெரும்பாலான கழிப்பிடங்கள் போதிய தண்ணீர் வசதியில்லை என்று கூறப்படுகிறது.

பக்தர்கள் கோரிக்கை

ஏராளமானோர் திறந்தவெளியை இயற்கை உபாதை கழிக்க பயன்படுத்தியதால் கிரிவலப்பாதையில் பெரும்பாலான பகுதிகளில் துர்நாற்றம் வீசியது.

மேலும் கார்கள் நிறுத்த போதிய வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படாததால் திருவண்ணாமலை நகரில் சாலைகளிலும், தாலுகா அலுவலகத்தின் முன்பும், கிழக்கு போலீஸ் நிலையம் எதிரில் உள்ள திண்டிவனம் சாலை மேம்பாலத்திலும் கார்கள் அணிவகுத்து நின்றன.

குறிப்பாக இன்று காலை 11 மணி வரையில் மேம்பாலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட கார்கள் அங்கிருந்து அப்புறப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் இன்று அலுவலக வேலை என்பதால் தாலுகா அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார்களால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டது.

எனவே இதனை கருத்தில் கொண்டு வரும் பவுர்ணமி நாட்களில் கார்கள் நிறுத்த பார்க்கிங் வசதி ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Related Tags :
Next Story