அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சாய்ந்தன
திருக்காட்டுப்பள்ளி பகுதியில் பெய்த பலத்த மழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சாய்ந்தன. பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரண வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருக்காட்டுப்பள்ளி:
திருக்காட்டுப்பள்ளி பகுதியில் பெய்த பலத்த மழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சாய்ந்தன. பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரண வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறுவை சாகுபடி
திருக்காட்டுப்பள்ளி அதனை சுற்றியுள்ள காவிரி கரையோர கிராமங்களில் ஆழ்துளை கிணற்று தண்ணீரை பயன்படுத்தி சித்திரை கார் எனப்படும் முன்பருவ குருவை சாகுபடி 4,896 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டது.
இந்த பயிர்கள் நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயார் நிலையில் இருந்து வந்தது. ஒரு சில இடங்களில் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அறுவடை செய்யப்பட்ட நெல்லை களத்து மேட்டிலேயே வந்து தனியார் வியாபாரிகள் நல்ல விலை கொடுத்து வாங்கி செல்கின்றனர்.
பலத்த மழையால் நெற்பயிர்கள் சாய்ந்தன
தற்போது வெயில் அடித்துக் கொண்டிருப்பதால் நல்ல முறையில் விளைந்த பயிரை அறுவடை செய்து விடலாம் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் இருந்தனர். ஆனால் நேற்று அதிகாலை திருக்காட்டுப்பள்ளி அருகே பலத்த மழை பெய்தது. இந்த மழையால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த குறுவை நெற்பயிர்கள் சாய்ந்தன.
திருக்காட்டுப்பள்ளி அருகே அலமேலுபுரம் பூண்டி, நாகாச்சி, விஷ்ணம் பேட்டை, திருச்செனம் பூண்டி, உள்ளிட்ட பல கிராமங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த முன் பட்ட குறுவை நெற்பயிர்கள் சாய்ந்தன. மேலும் சில வயல்களில் தண்ணீர் தேங்கியதால் கதிர்கள் மூழ்கி கிடக்கின்றன.. இந்த மழையால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
நிவாரணம் வழங்க வேண்டும்
வயலில் சாய்ந்துள்ள பயிர்களை அறுவடை செய்ய கூடுதல் செலவாகும். அறுவடை செய்யப்பட்ட நெல்லை நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு சென்றால் அவர்கள் காய வைக்க வேண்டும் என்று கூறும் போது காய வைக்க இடமில்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்த மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை வேளாண் துறையினர் பார்வையிட்டு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.