முதியோர்- மாற்றுத்திறனாளிகள் 50 பேருக்கு மாதாந்திர உதவித்தொகைக்கான ஆணை; அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்
தூத்துக்குடியில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 50 பேருக்கு மாதாந்திர உதவித்தொகைக்கான ஆணையை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.
தூத்துக்குடியில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 50 பேருக்கு மாதாந்திர உதவித்தொகைக்கான ஆணையை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.
உதவித்தொகை
தூத்துக்குடியில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், உதவித்தொகைக்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி நேற்று காலை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு 50 பேருக்கு உதவித் தொகைக்கான ஆணையை வழங்கினார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
கூடுதல் நிதி
முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஒரு லட்சம் பேருக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்கும் திட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார். அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்திலும் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தநிலையில் தூத்துக்குடி தொகுதியில் உதவித்தொகை கோரி விண்ணப்பித்து நிலுவையில் உள்ள மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு உதவித் தொகை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 50 பேருக்கு மாதாந்திர உதவித் தொகை ரூ.1500 வழங்கும் திட்டத்தின் கீழ் ஆணை வழங்கப்பட்டுள்ளது. அதே போன்று இன்னும் பல விண்ணப்பங்கள் உள்ளன. முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை கோரி விண்ணப்பித்த தகுதியானவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்கு வருவாய்த்துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளிடம் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய கோரி உள்ளோம். இன்னும் கூடுதல் நிதி ஒதுக்கப்படும் போது, தகுதியான அனைவருக்கும் உதவித் தொகை வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி தாசில்தார் பிரபாகரன், சமூக பாதுகாப்பு திட்ட தனிதாசில்தார் ராஜசெல்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.