ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள், அ.ம.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
கொடநாடு வழக்கு விசாரணையை துரிதப்படுத்தக்கோரி ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள், அ.ம.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சிக்கொடி, சின்னத்தை பயன்படுத்தியதாக போலீசில் அ.தி.மு.க.வினர் புகார் கூறினர்.
கடலூர்:
கொடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை மற்றும் மர்ம நிகழ்வுகள் குறித்து துரிதமாக விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தர தி.மு.க.அரசை வலியுறுத்தி ஒருங்கிணைந்த கடலூர் மாவட்ட ஓ.பி.எஸ். ஆதரவு கட்சியினர், அ.ம.மு.க.வினர் இணைந்து கடலூர் மஞ்சக்குப்பம் கார் நிறுத்தம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர மாவட்ட செயலாளர் ராமசாமி தலைமை தாங்கினார். மாவட்ட அவைத் தலைவர்கள் எம்.ராதாகிருஷ்ணன், ராமதுரை, துணை செயலாளர்கள் மணிகண்டன்,வேலு என்கிற ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் துரைபாண்டியன், சுந்தர்ராஜன், அ.ம.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் ஆடிட்டர் சுந்தரமூர்த்தி, மத்திய மாவட்ட செயலாளர் பக்தரட்சகன், மேற்கு மாவட்ட செயலாளர் மோகன், வடக்கு மாவட்ட செயலாளர் முருகேசன், மருத்துவர் அணி பிரித்திஎப்சிபா, தலைமை கழக நிர்வாகி தனசேகரன், சிறுபான்மை பிரிவு தாமஸ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் பகுதி செயலாளர்கள் வைத்தியநாதன், சந்தானம், மாவட்ட நிர்வாகிகள் சக்திவேல், நடனமயிலோன், ஒன்றிய செயலாளர் ஜெயகாந்தன், கடலூர் மாநகர செயலாளர் ராதாகிருஷ்ணன், எம்.ஜி.ஆர். மன்றம் முருகன், முன்னாள் ஒன்றிய செயலாளர் பாடலீஸ்வரன், அ.ம.மு.க. நகர அவைத் தலைவர் ரங்கா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தெற்கு ஒன்றிய செயலாளர் கிருபாகரன் நன்றி கூறினார்.
போலீசில் அ.தி.மு.க. புகார்
கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் கடலூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவர் சேவல்குமார் தலைமையிலான கட்சி நிர்வாகிகள் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இந்நிலையில் கடலூர் மஞ்சக்குப்பம் கார் நிறுத்தம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் எங்களது கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் புகைப்படத்தை இணைத்தும், எங்களது கட்சிக்கு தேர்தல் ஆணையம் வழங்கிய சின்னமான இரட்டை சிலை சின்னத்தையும், கழக கொடியையும் பதித்து வழிநெடுக பேனர்கள், மேடையிலும் எங்களது அனுமதியின்றி பயன்படுத்தி உள்ளனர்.
மாநகரத்தில் அசம்பாவிதம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் ஓ.பன்னீர்செல்வம் தூண்டுதலின் பேரில் அவரது ஆதரவாளர்கள் எங்களது கட்சி கொடி, சின்னத்தை பயன்படுத்தி உள்ளனர். ஆகவே அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.