மின்சார அலுவலகங்களில் ஆதாரை இணைக்க சிறப்பு கவுண்டர்கள் திறப்பு


மின்சார அலுவலகங்களில் ஆதாரை இணைக்க சிறப்பு கவுண்டர்கள் திறப்பு
x

கோப்புப்படம் 

பொதுமக்களுக்கு உதவுவதற்காக ஒவ்வொரு மின்சார அலுவலகத்திலும் கூடுதலாக ஒரு கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் 3 கோடிக்கு மேல் மின் இணைப்புகள் உள்ளன. 2 மாதத்துக்கு ஒருமுறை மின் பயன்பாடு கணக்கிடப்பட்டு அதற்கான கட்டணத்தை செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. மின்வாரிய இணையதளம், மின்வாரிய செயலி, கூகுள் பே, போன் பே செயலிகள் மூலம் ஏராளமானோர் மின் கட்டணத்தை செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்தது. இதுதொடர்பாக மின்நுகர்வோரின் செல்போன் எண்ணுக்கும் மின்வாரியம் குறுஞ்செய்தி அனுப்பியது.

ஆதார் இணைக்காவிட்டால் மின் கட்டணம் செலுத்த முடியாமல் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்ற பயத்தில் பலர் இணைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கம்ப்யூட்டர் சேவை மையங்களை நாடி ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர். பாமர மக்களுக்கு உதவிட மின்சார அலுவலகங்களில் சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள மின்சார அலுவலகங்களில் இதற்காக பிரத்தியேக கவுண்டர் திறக்கப்பட்டுள்ளது.

மின் நுகர்வோர் ஆதார் அட்டையை கொண்டு சென்றால் போதுமானது. அதனை எவ்வித கட்டணமும் இல்லாமல் இணைத்து கொடுக்கப்படுகிறது. வாடகை வீட்டுக்காரர்கள் வீட்டின் உரிமையாளரின் ஆதார் எண், செல்போன் ஆகியவற்றை கொண்டு செல்ல வேண்டும். மின் இணைப்போடு ஆதார் இணைக்கும் போது அதில் பதிவாகி உள்ள மொபைல் எண்ணுக்கு ஓ.டி.பி. எண் வரும். அதனால் ஆதாரில் குறிப்பிட்டுள்ள மொபைல் போன் எண்ணை கட்டாயம் மின்சார அலுவலகத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

சென்னையில் மின் இணைப்போடு ஆதார் இணைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. சென்னைக்கு வடக்கு மண்டலத்தில் 71, தெற்கு மண்டலத்தில் 54, மத்தி மண்டலத்தில் 71 ஆக மொத்தம் 185 மின்சார அலுவலகங்களில் சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர்கள் கூறும்போது,

'மின் இணைப்போடு ஆதார் எண்ணை உடனடியாக இணைக்க வேண்டும். ஆன்லைன் வழியாக இதனை மேற்கொள்ளலாம். மேலும் பொதுமக்களுக்கு உதவுவதற்காக ஒவ்வொரு மின்சார அலுவலகத்திலும் கூடுதலாக ஒரு கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளது. அதில் பொதுமக்களுக்கு ஆதாரை இணைக்க உதவி செய்யப்படும். ஆதார் அட்டை மற்றும் செல்போன் எண் அவசியம். இந்த இரண்டும் இருந்தால் தான் இணைக்க முடியும்' என்றனர்.

ஆதார் எண்ணை மின் இணைப்போடு இணைப்பதற்கு 2 காரணங்கள் கூறப்படுகின்றன. 100 யூனிட்டிற்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருவதால் ஏற்படும் இழப்பை ஆய்வு செய்ய இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுவதாக தகவல் தெரிவிக்கின்றது.

ஒரே பெயரில் எத்தனை இணைப்புகள் உள்ளன என்பதை கண்டுபிடிக்கவும், வரும் காலத்தில் மின்சார வாரியத்தை தனியாருக்கு கொடுப்பதற்கு ஏதுவாக எத்தனை இணைப்புகள் உள்ளன என்பதை துல்லியமாக ஆய்வு செய்ய ஆதார் இணைப்பு நடவடிக்கை மேற்கொள்வதாக மின் வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Next Story