நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் திறப்பு- அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் திறக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் திறக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
திருச்சியில் நேற்று அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஒருங்கிணைந்த பஸ் நிலையம்
புதிய பஸ் நிலைய பணிகள் விரைவாக நடக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சம்பந்தப்பட்ட அனைத்துத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தி வருகிறோம். பஸ் நிலைய பணிகள் டிசம்பர் மாதத்துக்குள் முடிவடையும் என அதிகாரிகளும், ஒப்பந்ததாரர்களும் கூறி உள்ளனர். ஆனால் மழைக்காலம் வர உள்ளதால் அது எந்தஅளவுக்கு சாத்தியம் என்பது தெரியவில்லை. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக பஸ் நிலையத்தை திறக்க வேண்டும் என்ற முனைப்பில் பணிகள் நடக்கிறது.
ஆனால் நாடாளுமன்ற தேர்தல் முன்கூட்டியே வருமா? என்பது தெரியாது. திருச்சி மத்திய பஸ் நிலையம், சத்திரம் பஸ் நிலையம் இரண்டையும் மேம்படுத்த உள்ளோம். அங்கு கூடுதலாக இடம் இருந்தால் மாநகராட்சிக்கு வருவாய் வரும்வகையில் வணிக வளாகம் கட்டப்படும். பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்கப்படும் இடத்தில் 520 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் மாநகராட்சிக்கு 100 ஏக்கர், ஐ.டி.பார்க்கிற்கு 10 ஏக்கர், விளையாட்டு திடலுக்கு 30 ஏக்கர், மின்சாரத்துறைக்கு 2½ ஏக்கர், தீயணைப்புத்துறைக்கு 1½ ஏக்கர் ஒதுக்கப்பட உள்ளது. இதுதவிர, 300 ஏக்கர் கையிருப்பில் உள்ளது.
மெட்ரோ திட்டம் ஆய்வு நிறைவு
வருங்காலத்தில் தேவைப்படும்போது, அதை பயன்படுத்துவோம். திருச்சியிலும், சேலத்திலும் மெட்ரோ பணிக்கான ஆய்வை முடித்துவிட்டார்கள். மெட்ரோ திட்டம் வந்துவிட்டால் உயர்மட்ட சாலை பணிகள் தொடங்கப்பட்டுவிடும். மாநகராட்சி பகுதியில் விடுபட்ட இடங்களில் பாதாளசாக்கடை பணிக்காக தற்போது ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. திருச்சி மாநகராட்சி விரிவுப்படுத்தப்படும்போது, அந்த பகுதிகளில் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை பணிகளுக்கு முதல்-அமைச்சரிடம் அனுமதி பெற்று நிதி ஒதுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக அமைச்சர் கே.என்.நேரு பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பஸ் நிலைய கட்டுமான பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். அப்போது பஸ் நிலையம் கட்டுமான பணிகள் முடிந்தபிறகு அதன் தோற்றம் எவ்வாறு இருக்கும் என டிஜிட்டல் திரையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஆய்வின்போது, கலெக்டர் பிரதீப் குமார், மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், கவுன்சிலர்கள் காஜாமலைவிஜய், முத்துச்செல்வம், ரெக்ஸ் உள்பட பலர் உடன் இருந்தனர்.