கரூர் மனோகரா கார்னரில் காவல் உதவி மையத்தை திறப்பு


கரூர் மனோகரா கார்னரில் காவல் உதவி மையத்தை திறப்பு
x

கரூர் மனோகரா கார்னரில் காவல் உதவி மையத்தை திறந்து வைத்து, மாவட்டத்தில் விபத்துகளை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் கூறினார்.

கரூர்

காவல் உதவி மையம்

கரூர் பஸ் நிலையம் அருகே உள்ள மனோகரா கார்னர் பகுதியில் கருர் டவுன் போலீஸ் நிலையம் சார்பில் காவல் உதவி மையம் திறக்கப்பட்டது. காவல் உதவி மையத்தை கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, உதவி மையத்தை பார்வையிட்டார்.

தொடர்ந்து கோடை காலங்களில் கரூர் போக்குவரத்து போலீசாருக்கு குளிர்பானங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு போக்குவரத்து போலீசாருக்கு குளிர்பானங்களை வழங்கினார்.

பேட்டி

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கரூர் மனோகரா கார்னர் பகுதியில் காவல் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது. கரூர் மாநகரம் முழுவதும் போக்குவரத்து நெரிசல் இருக்கக்கூடிய பகுதியாகும். மேலும் குற்ற நிகழ்வுகள் தடுக்கப்பட வேண்டிய இடம் என்பதாலும், வெயில், மழை காலங்களில் போலீசார் போக்குவரத்து நெரிசலை சீர்செய்யவும் காவல் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது.

கோடை காலம் ஆரம்பித்துள்ளதால் போலீசாருக்கு பகல் நேரங்களில் 4 முறை மோர் வழங்கும் திட்டமும் இன்று (நேற்று) முதல் தொடங்கப்பட்டுள்ளது. இதேபோல் கரூர் மாவட்டத்தில் சோலார் பேனலில் இயங்குகின்ற பேரிகார்டு கொண்டு வரப்பட்டுள்ளது.

விபத்துகள் குறைவு

இந்த பேரிகார்டு சோலார் பேனலில் சார்ஜ் ஆகி இரவு நேரங்களில் லைட் ஒளிரக்கூடிய தன்மை கொண்டது. இரவு நேரங்களில் சாதாரண பேரிகார்டு வைக்கும் போது வாகனங்கள் பேரிகார்டில் மோதி விபத்து ஏற்படுகிறது. எனவே இந்த விபத்துகளை தடுக்கும் வகையில் இரவு நேரங்களில் லைட் ஒளிரக்கூடிய வகையில் இந்த சோலார் பேனல் பேரிகார்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த பேரிகார்டுகள் விபத்துகள் நடக்கக்கூடிய முக்கிய இடங்களிலும், மாவட்ட எல்லைகளிலும் வைக்கப்பட உள்ளன. கரூர் மாவட்டத்தில் விபத்துகள் அதிகமாக நடக்கிறது. இதனை கவனித்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த ஆண்டு 30 இறப்புகள் தடுக்கப்பட்டு உள்ளன. 2021-ம் ஆண்டை காட்டிலும் 2022-ம் ஆண்டு 30 விபத்துகள் குறைந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், கரூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விதுன்குமார், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் புண்ணியமூர்த்தி உள்பட போலீசார் பலர் கலந்து கொண்டனர்.


Next Story