சிறை பணியாளர்கள் குடியிருப்பில் நூலகம் திறப்பு
சிறை பணியாளர்கள் குடியிருப்பில் நூலகம் திறக்கப்பட்டுள்ளது.
தமிழக சிறைத்துறை டி.ஜி.பி. அமரேஷ்பூஜாரி உத்தரவின்படி, திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள சிறைப்பணியாளர்கள் குடியிருப்பில் உள்ள பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் சிறைப்பணியாளர் நூலகம் அமைக்கப்பட்டது. இந்த நூலகத்தை திருச்சி சரக சிறைத்துறை டி.ஐ.ஜி.ஜெயபாரதி நேற்று திறந்து வைத்தார். இந்த நூலகத்தில் கதைகள், கவிதைகள், தமிழ்இலக்கியம், பொதுஅறிவுநூல்கள், துறைத்தேர்வுகளுக்கான புத்தகங்கள், தலைவர்களின் வாழ்க்கை வரலாறு நூல்கள் போன்ற ஆயிரக்கணக்கான நூல்கள் இடம் பெற்றுள்ளன. புத்தகங்களை பணியாளர்கள் தங்களது ஓய்வு நேரங்களில் நூலகத்தில் அமர்ந்து அமைதியான முறையில் படித்திடவும், பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் நூலக ஆசிரியரின் அனுமதி பெற்று தங்களுக்கு தேவையான புத்தகங்களை வீட்டிற்கு எடுத்து சென்று படித்து பயன்பெறவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் திருச்சி மத்திய சிறையில் சிறை கைதிகளுக்காக அமைதி கல்வி வகுப்பு கடந்த 10 நாட்களாக நடத்தப்பட்டது. இதன் நிறைவுநாளான நேற்று 105 தண்டனை கைதிகளுக்கு சிறைத்துறை டி.ஐ.ஜி.ஜெயபாரதி சான்றிதழ்களை வழங்கினார். அப்போது சிறை சூப்பிரண்டு (பொறுப்பு) கிருஷ்ணகுமார் உடன் இருந்தார்.