நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுமா?


நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுமா?
x

குறுவை நெல்லை கொள்முதல் செய்ய நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

மயிலாடுதுறை

சீர்காழி;

குறுவை நெல்லை கொள்முதல் செய்ய நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

குறுவை சாகுபடி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவுக்கு உட்பட்ட சீர்காழி, கொள்ளிடம், புத்தூர், மாதானம், ஆச்சாள்புரம், அகர வட்டாரம், எடமணல், கடவாசல், விளந்திட சமுத்திரம், அத்தியூர், கொண்டல், அகர எலத்தூர், அகனி, வள்ளுவக்குடி, கன்னியாகுடி, திருப்புன்கூர், ஆதமங்கலம், பெருமங்கலம், மங்கைமடம், திருவெண்காடு, மாதிரிவேலூர், குன்னம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள விவசாயிகள் கடுமையான மின் தட்டுப்பாடு நிலவிய சூழலில் மின் மோட்டாரை பயன்படுத்தி குறுவை சாகுபடி செய்தனர்.

அறுவடை

தற்போது பல்வேறு கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்ட குறுவை நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ளது. இதைப்போல பல்வேறு கிராமங்களில் கடந்த 15 நாட்களாக குறுவை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்தநிலையில் தமிழக அரசு இது நாள் வரை குறுவை நெல்லை கொள்முதல் செய்ய நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்காததால் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளை விவசாயிகள் அருகில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நீண்ட நாட்களாக அடுக்கி வைத்துள்ளனர்.

கொள்முதல் நிலையங்கள்

மேலும் விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்க முடியாமல் குறைந்த விலைக்கு தனியார் வியாபாரிகளிடம் கடனுக்கு நெல்லை விற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து குறுவை நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோாிக்கை விடுத்துள்ளனர்.


Next Story