கும்பகோணத்தில் மீண்டும் சின்ன வெங்காயம் விலை உயர்வு
கும்பகோணத்தில் வரத்து குறைவால் சின்ன வெங்காயம் விலை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது.
கும்பகோணத்தில் வரத்து குறைவால் சின்ன வெங்காயம் விலை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது.
காய்கறி மார்க்கெட்
கும்பகோணம்- தஞ்சை சாலையில் தாராசுரம் பகுதியில் காய்கறி மார்க்கெட் உள்ளது. இங்கு ஏராளமான மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை கடைகள் உள்ளன. இந்த மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கர்நாடகா, ஆந்திரா, மராட்டியம், ஒடிசா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
இங்கிருந்து மன்னார்குடி, பட்டுக்கோட்டை, நீடாமங்கலம், திருவையாறு, ஒரத்தநாடு உள்ளிட்ட பகுதிகளுக்கும் காய்கறிகள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
கும்பகோணத்தில் கடந்த வாரம் வரை காய்கறிகளின் விலை குறைந்து இருந்தது. கடந்த மாதத்திற்கு முன்பு வரத்து குறைவு காரணமாக சின்னவெங்காயம், பீன்ஸ் காய்கறிகளின் விலை அதிகரித்து காணப்பட்டது. அதேபோல் தக்காளி விலையும் அதிகரித்து காணப்பட்டது.
மீண்டும் விலை அதிகரிப்பு
கும்பகோணம் தாராசுரம் காய்கறி மார்க்கெட்டிற்கு திருச்சி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட மார்க்கெட்டுகளில் இருந்தும், கர்நாடகா, மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் அதிகளவில் சின்னவெங்காயம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டதால் விலை குறைந்தது.
அந்த சமயத்தில் சின்னவெங்காயம் 1 கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது மீண்டும் வரத்து குறைய தொடங்கி விட்டது. இதனால் மீண்டும் விலை அதிகரித்துள்ளது. 1 கிலோ ரூ.40-க்கு விற்பனையான சின்ன வெங்காயம் நேற்று ரூ.80-க்கு விற்பனையானது. கர்நாடகத்தில் இருந்து வரத்து குறைந்ததாலும், தமிழகத்தில் வெங்காயம் விளைய கூடிய பகுதிகளில் விளைச்சல் குறைந்ததால் விலை உயர்ந்துள்ளது. விலை குறைந்த நிலையில் மீண்டும் விலை அதிகரித்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
படிப்படியாக விலை குறைய வாய்ப்பு
இதுகுறித்து வெங்காய வியாபாரிகள் கூறுகையில், கும்பகோணத்திற்கு திருச்சி, பெரம்பலூர், ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் கர்நாடகா, மாராட்டியம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் சின்னவெங்காயம் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. தற்போது வெளிமாநிலங்களில் கொண்டு வரப்படும் சின்னவெங்காயம் வழக்கத்தை விட குறைவாக வருகிறது. தீபாவளி வரை விலை அதிகரித்து காணப்படும். அதன் பின்னர் படிப்படியாக விலை குறைய வாய்ப்புள்ளது என்றனர்.