அண்ணா பிறந்தநாளையொட்டி மாரத்தான் போட்டி
தேனியில் அண்ணா பிறந்தநாளையொட்டி மாரத்தான் போட்டி நடந்தது.
மாரத்தான் போட்டி
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை சார்பில் தேனி மாவட்ட அளவில் அண்ணா பிறந்தநாளையொட்டி மாரத்தான் போட்டிகள் தேனி அருகே அரண்மனைப்புதூரில் நேற்று நடந்தது. போட்டிகளை கலெக்டர் ஷஜீவனா தொடங்கி வைத்தார்.
17 முதல் 25 வயது வரையுள்ள மாணவ, மாணவிகள், 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் என 4 பிரிவுகளாக போட்டிகள் நடந்தன. 17 முதல் 25 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான மாரத்தான் ஓட்டம் அரண்மனைபுதூர் ஊராட்சிமன்ற அலுவலகத்தில் இருந்து தொடங்கி கொடுவிலார்பட்டி, பள்ளப்பட்டி விலக்கு, அய்யனார்புரம் வழியாக மீண்டும் அரண்மனைப்புதூர் வரை 8 கி.மீ தூரம் சென்று நிறைவடைந்தது. இதில் 70 பேர் பங்கேற்றனர். அதில் மாணவர் பத்ரி நாராயணன் முதலிடம் பிடித்தார்.
25 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான போட்டி அரண்மனைபுதூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இருந்து தொடங்கி கொடுவிலார்பட்டி, பள்ளப்பட்டி விலக்கு, அய்யனார்புரம் வழியாக மீண்டும் அரண்மனைப்புதூர் விலக்கு, ரெயில்வே கேட் வழியாக தேனி புதிய பஸ் நிலையம் வரை 10 கி.மீ தூரம் நடந்தது. அதில் 30 பேர் கலந்துகொண்டனர். அதில் போலீஸ்காரர் ராஜேஷ் கண்ணன் முதலிடம் பிடித்தார்.
பரிசுகள்
17 முதல் 25 வயதிற்குட்பட்ட மாணவிகள் பிரிவில் 125 பேரும், 25 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் பிரிவில் 25 பேர் கலந்துகொண்டனர். அவர்களுக்கு அரண்மனைபுதூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தொடங்கி கொடுவிலார்பட்டி, பள்ளப்பட்டி விலக்கு, அய்யனார்புரம் வரை 5 கி.மீ தூரம் போட்டி நடந்தது. 25 வயதுக்குட்பட்டோர் பிரிவில் மாணவி அஸ்வினி, 25 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் ஜெயா ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.
ஒவ்வொரு போட்டியிலும் முதலிடம் பிடித்தவர்களுக்கு ரூ.5 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.3 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.2 ஆயிரம் மற்றும் 4 முதல் 10 வரையிலான இடங்களை பிடித்தவர்களுக்கு தலா ரூ.1,000 வீதம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. பரிசு மற்றும் சான்றிதழ்களை கலெக்டர் ஷஜீவனா வழங்கினார். இதில், மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன், உத்தமபாளையம் உதவி போலீஸ் சூப்பிரண்டு மதுக்குமாரி, மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.