வடக்குதாமரைகுளம்- பறக்கை சாலையில்பாலப்பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்
வடக்குதாமரைகுளம்-பறக்கை சாலையில் பாலப்பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர். அப்போது பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்தாமரைகுளம்,
வடக்குதாமரைகுளம்-பறக்கை சாலையில் பாலப்பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர். அப்போது பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாலப்பணி
வடக்குதாமரைகுளத்தில் இருந்து பறக்கை செல்லும் சாலை வழியாக தினமும் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், அலுவலகங்களுக்கு செல்லும் பணியாளர்கள், பொதுமக்கள் சென்று வருகின்றனர். இந்தநிலையில் இந்த சாலையின் குறுக்கே பாலம் அமைக்க இரண்டு மூன்று இடங்களில் ஆழமாக பள்ளம் தோண்டி பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் கடந்த 1½ மாதங்களாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாகவும், பணிகள் அடிக்கடி நிறுத்தப்படுவதாகவும் அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.
இதனால் மாற்றுப்பாதையாக வயல்களுக்குள் இறங்கிதான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. அந்த பாதையில் தண்ணீர் தேங்கி சகதியாக இருப்பதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் அடிக்கடி தடுமாறி விழுந்து விபத்துக்கள் ஏற்படுகிறது. மேலும் சாலை துண்டிக்கப்பட்டுள்ளதால் பள்ளி, கல்லூரி வாகனங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் வாகனங்கள் இந்த வழியாக வர முடியவில்லை.
எனவே பாலப்பணியை விரைவாக முடிக்க வேண்டும் என்றும், அதுவரை பொதுமக்கள் பாதுகாப்பாக செல்ல மாற்றுப்பாதை அமைத்து தர வேண்டும் என்றும் அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
பணியை தடுத்து நிறுத்தினர்
இந்தநிலையில் நேற்று ஊழியர்கள் வழக்கம் போல் வந்து பாலப்பணியை தொடங்கினர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரட்டு பணியை தடுத்து நிறுத்தினர். மாற்று பாதை அமைத்து தந்துவிட்டு இந்த பணிகளை தொடருமாறும், பாலப்பணியை வேகமாக முடிக்க வேண்டும் எனவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து நேற்று மாலையில் தற்காலிகமாக வயலின் ஓரம் மண் நிரப்பி மாற்றுப்பாதை அமைக்கப்பட்டது. அந்த வழியாக நடந்து செல்பவர்களும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும் சென்று வருகின்றனர்.
அதே நேரத்தில் பாலப் பணியை விரைவில் முடிக்க வேண்டும் என்றும் இல்லையெனில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றும் பொதுமக்கள் அறிவித்துள்ளனர்.