கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை
சின்னாளப்பட்டி அருகே மடியில் கல்லை கட்டி கொண்டு கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
மூதாட்டி மாயம்
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி அருகே உள்ள நடுப்பட்டி குரும்பபட்டியை சேர்ந்தவர் பாப்பம்மாள் (வயது 65). இவரது கணவர் இறந்து விட்டார். இதனால் பாப்பம்மாள் அதே பகுதியில் உள்ள தனது பேரன் சுரேஷ் வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று காலை பாப்பம்மாள் வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன்பின்னர் அவர் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினா்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி அலைந்தனர். அப்போது அம்பாத்துரை அருகே மாயமான பாப்பம்மாளுக்கு சொந்தமான தோட்டத்து கிணற்று மேட்டில் அவரது செருப்பு கிடந்தது.
கிணற்றில் குதித்து தற்கொலை
இதையடுத்து உறவினர்கள் 45 அடி ஆழமுள்ள அந்த கிணற்றை எட்டி பாா்த்தனர். கிணற்றில் தண்ணீர் அதிகமாக இருந்ததால் ஒன்றும் தெரியவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்ேபரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் இறங்கி சுமார் 1 மணி தேடுதலுக்கு பிறகு பெண் ஒருவரின் உடலை வலை மூலம் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
அப்போது அது மாயமான பாப்பம்மாள் என்பது தெரியவந்தது. மேலும் அவரது சேலைக்குள் வைத்து மடியில் கல் ஒன்று கட்டப்பட்டு இருந்தது. இதற்கிடையே தகவல் அறிந்த சின்னாளப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் பாப்பம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பாப்பம்மாள் கல்லை கட்டிகொண்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். ஆனால் அவர் தற்கொலை செய்ததற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மடியில் கல்லை கட்டி கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.