கொலை முயற்சி வழக்கில் முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை
கொலை முயற்சி வழக்கில் முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், ரெகுநாதபுரத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 44). அதே பகுதியை சேர்ந்தவர் ராமையா (59). இந்த நிலையில் பாலகிருஷ்ணனின் வீட்டில் இருந்த கருவை மரம் கஜா புயலின் போது, ராமையா வீட்டின் பக்கம் சாய்ந்தது. இதனை சம்பவத்தன்று ராமையா வெட்டிய போது, பாலகிருஷ்ணனின் மனைவி தட்டிக்கேட்டதால் அவரை ராமையா அரிவாளால் வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக ரெகுநாதபுரம் போலீஸ் நிலையத்தில் பாலகிருஷ்ணன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமையாவை கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயக்குமாரி ஜெமிரத்தினா தீர்ப்பு வழங்கினார். இதில் ராமையாவுக்கு கொலை முயற்சி வழக்கின் பிரிவில் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.