சித்த மருத்துவக்கல்லூரி அமையும் இடத்தில் அதிகாரிகள் ஆய்வு
பழனியில் சித்த மருத்துவக்கல்லூரி அமையும் இடத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
பழனியில் சித்த மருத்துவக்கல்லூரி அமைக்க சிவகிரிப்பட்டி பகுதியில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு நிலம் கையகப்படுத்தப்பட்டது. ஆனால் சித்த மருத்துவக்கல்லூரி அமைப்பதில் கால தாமதம் இருந்து வந்தது. அதைத்தொடர்ந்து பழனியில் சித்த மருத்துவக்கல்லூரி அமைக்க வேண்டும் என்று பழனி பகுதி மக்கள், வணிகர்கள் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். சில மாதங்களுக்கு முன்பு பழனியில் அறநிலையத்துறை சார்பில் சித்த மருத்துவக்கல்லூரி அமைக்கப்படும் என்று அரசு அறிவித்தது. அதையடுத்து அதற்கான பணிகள் நடந்து வந்தன.
இந்தநிலையில் பழனி முருகன் கோவில் இணை ஆணையர் நடராஜன், துணை ஆணையர் பிரகாஷ், பாளையங்கோட்டை சித்த மருத்துவக்கல்லூரி முதல்வர் திருத்தணி மற்றும் பழனி அரசு மருத்துவமனை சித்தா டாக்டர் மகேந்திரன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், விரைவில் சித்த மருத்துவக்கல்லூரி தொடங்கப்பட உள்ளது. அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெறுகிறது என்றனர்.