ரெயிலில் கஞ்சா கடத்தியஒடிசா வாலிபர் கைது
சேலம் வழியாக கேரளா சென்ற ரெயிலில் கஞ்சா கடத்திய ஒடிசா வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சூரமங்கலம்:-
சேலம் வழியாக செல்லும் ரெயில்களில் கஞ்சா கடத்தப்படுவதை தடுக்கும் வகையில் ரெயில்வே போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று அதிகாலை ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரளா செல்லும் தன்பாத்- ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ெரயிலில் (வண்டி எண் 13351) போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனை ரெயில்வே போலீஸ் சிறப்பு காவலர் தங்கராஜ் தலைமையில் போலீசார் அசோகன், சதீஷ், அருண், தமிழ்ச்செல்வன் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் சாமல்பட்டி -சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையங்களுக்கு இடையே சோதனையில் ஈடுபட்டனர். அப்போது எஸ் -6 பெட்டியில் சந்தேகப்படும்படியான நபர் ஒருவர் இருந்தார், அவரிடம் இருந்த பையை போலீசார் சோதனை நடத்தினர். சோதனையில் அந்த பையில் 10 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், அந்த நபர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கவுரிசங்கர் தனபதி (வயது 31) என்பதும், அவர் கேரளாவுக்கு கஞ்சாவை கடத்திச்சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்ததுடன், அவரிடம் இருந்த 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.