கருவேல மரங்களை அகற்ற வேண்டும்
கண்மாய் பகுதியில் உள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
சிவகாசி,
கண்மாய் பகுதியில் உள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
குறைதீர்க்கும் கூட்டம்
சிவகாசி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆர்.டி.ஓ. விஸ்வநாதன் தலைமை தாங்கினார். சிவகாசி தாசில்தார் லோகநாதன் முன்னிலை வகித்தார். தாசில்தார் ஆனந்தராஜ் வரவேற்றார்.
கூட்டத்தில் பல்வேறு துறைகளை சேர்ந்த 40 அதிகாரிகள் கலந்து கொண்டனர். கோரிக்கைகளை முன் வைத்து 37 விவசாயிகள் பேசினார். விவசாயிகள் வைத்த கோரிக்கைகள் வருமாறு:-
மூர்த்தி: ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட அச்சம்தவிர்த்தான் கிராமத்தில் அதிக அளவில் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து கிடக்கிறது. இதனை உரிய வழிக்காட்டுதல் முறையில் அகற்ற வேண்டும்.
ஆக்கிரமிப்பு
திருநாராயணன்: சிவகாசி தாலுகாவில் உள்ள உப்புப்பட்டியில் இருந்து காக்கிவாடன்பட்டி முருகன் கோவில் வரை உள்ள ஓடை, வண்டிப் பாதை ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் உள்ளது. இதனால் மழைக்காலங்களில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை மீட்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமமூர்த்தி: ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்தில் உள்ள கொத்தங்குளம் கண்மாய் பகுதியில் சீமைகருவேல மரங்கள் அதிகளவில் உள்ளது. இதனை 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் அகற்ற வேண்டும்.
ஜெயராமன்: ராஜபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பல இடங்களில் திறந்தவெளியில் மலம் கழிக்கப்படுகிறது. இதனை தடுக்க வேண்டும். மேலும் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் கூறினர்.
பாராட்டு
பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் மணல் கடத்தல் அதிகமாக இருக்கிறது என்று கடந்த கூட்டத்தில் சில விவசாயிகள் பேசினர்.
இதனை தொடர்ந்து மணல் கடத்தல்காரர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்த ஆர்.டி.ஓ. விஸ்வநாதனுக்கு விவசாயிகள் சார்பில் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.