நுங்கு விற்பனை அமோகம்


நுங்கு விற்பனை அமோகம்
x

இடையக்கோட்டை பகுதியில் நுங்கு விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.

திண்டுக்கல்

கோடைக்காலத்தில் நுங்கு சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான நீர்ச்சத்து கிடைக்கிறது. மிகவும் சுவையாக இருப்பது மட்டுமின்றி, நுங்கில் பலவிதமான நன்மைகள் உள்ளன. உடலில் கனிமச்சத்து, சர்க்கரையின் அளவை சீராக வைத்து, சுறுசுறுப்புடன் செயல்படுவதற்கு நுங்கு பெரிதும் உதவியாக இருக்கிறது. இதுமட்டுமின்றி வைட்டமின் பி, இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம் போன்ற பல்வேறு சத்துக்களும் நிறைந்துள்ளன. உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுப்பொருளான நுங்கு, உடல்வெப்பத்தை தணிக்கும் ஆற்றல் உடையது.

கோடைக்காலத்தில் குளிர்பானத்தை அருந்துவதை விட நுங்கு சாப்பிடுவது உடல்நலத்திற்கு மிகவும் நல்லது என டாக்டர்கள் கூறுகிறார்கள். மேலும் கொழுப்பை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்கும் ஆற்றல் கொண்டதாக நுங்கு உள்ளது. பல்வேறு சிறப்புகளுக்கு சொந்தமான நுங்கு விற்பனை திண்டுக்கல், இடையக்கோட்டை, ஒட்டன்சத்திரம், பழனி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் களை கட்டி வருகிறது. ஒரு நுங்கு ரூ.10 வரை விற்பனை செய்யப்படுகிறது. சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கிய மக்கள் ஆர்வமுடன் நுங்குகளை வாங்கி செல்கின்றனர்.


Next Story