17 வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி கைது
தஞ்சையில் தலைமறைவாக இருந்து வந்த 17 வழக்குகளில் தொடர்புடைய ரவுடி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தஞ்சை பூக்கார தெருவை சேர்ந்தவர் சின்னக்குண்டு என்ற சரவணகுமார். (வயது 36). பிரபல ரவுடியான இவர் மீது தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையம் மற்றும் மாவட்டங்களில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை, கொள்ளை, திருட்டு, கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தல் வழக்குகள் உள்ளன.மொத்தம் சரவணகுமார் மீது 17 வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் சரவணகுமார் நீண்ட நாட்களாக போலீசில் பிடிபடாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இதையடுத்து அவரை கைது செய்ய தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் உத்தரவிட்டார்.அதன்பேரில் தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா மேற்பார்வையில் மருத்துவக்கல்லூரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டத் சத்யன் தலைமையிலான தனிப்படையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் தஞ்சையில் பதுங்கி இருந்த அவரை தனிப்படை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.