சாதாரண படுக்கை வசதி பெட்டிகளை குறைக்கக் கூடாது: ரெயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் கூடுதல் வேண்டும்-பயணிகள் கருத்து
சாதாரண படுக்கை வசதி பெட்டிகளை குறைக்கக் கூடாது என்றும், ரெயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளை கூடுதலாக்க வேண்டும் என்றும் பயணிகள் கருத்து தெரிவித்தனர்.
ரெயில் பயணம் ஒரு சுகமான அனுபவமாகும். அலுப்பு இருக்காது. பாதுகாப்பானது. கட்டணம் குறைவு. எனவே உள்ளூர் வாசிகள் மட்டும் அல்ல, வெளி மாநிலத்தவர்களும் முதலில் தேர்வு செய்வது ரெயில் பயணத்தை தான். பஸ்களில் பல சோதனைகளுக்கு இடையே பயணம் செய்ய பெரும்பாலான பயணிகள் விரும்புவது இல்லை.
அதே நேரத்தில் ரெயிலில் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்வது சாதாரண காரியமல்ல. 120 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய முயன்றாலும் குறிப்பிட்ட சில ரெயில்களில் இடம் கிடைப்பது இல்லை. பண்டிகை காலங்களிலும், கோடை விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை நாட்களிலும் ரெயில் டிக்கெட்டுகள் கிடைப்பது பெரிய சவாலாக இருக்கிறது.
சாத்தியம் இல்லை
அவசரமாக பயணம் செய்பவர்கள் தட்கல் மற்றும் பிரீமியம் தட்கல் முறைகளை நாடிச்செல்கிறார்கள். ஆனால் அவை சாதாரண மக்களுக்கு பொருளாதார ரீதியாக சாத்தியமாவது இல்லை. எனவே சாதாரண மக்கள் பயணம் செய்யும் வகையில் ரெயில்களில் வசதிகளை மேம்படுத்துவதுடன் முன்பதிவு இல்லாத பெட்டிகளை அதிகரிப்பதே நல்ல தீர்வாக இருக்க முடியும்.
இதுபற்றி பொதுமக்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:-
பிளாட்பாரத்தின் நீளம்
தெற்கு ரெயில்வே துறை முன்னாள் அதிகாரி சி.கே.சிவராஜ் கூறியதாவது:-
ரெயில் நிலைய பிளாட்பாரத்தின் நீளத்திற்கு ஏற்ப 19 பெட்டிகள் கொண்ட ரெயில்தான் இயக்கப்பட்டு வந்தது. காலப்போக்கில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதால் பிளாட்பாரங்களின் நீளமும், லூப் லைன் என்ற பிளாட்பாரம் அருகில் உள்ள மற்றொரு ரெயில் பாதையின் நீளமும் அதிகரிக்கப்பட்டு தற்போது 22 பெட்டிகள் அதாவது, 21 பெட்டிகளும், 1 என்ஜினும் இயக்கப்படுகிறது. கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் போன்ற ரெயில்களில் பாமரமக்கள் பயணம் செய்வதற்காக முன்பதிவு இல்லாத பெட்டிகள் 2-க்கு பதிலாக 3 பெட்டிகள் இணைக்கப்பட்டு உள்ளன. முன்பதிவு செய்த படுக்கை வசதி கொண்ட 12 பெட்டிகளில் 3 பெட்டிகள் குறைக்கப்பட்டு 2 பெட்டிகள் பி-3, பி-4 என்ற பெயரில் குளிர்சாதன வசதி கொண்ட உயர்தர பெட்டியாக மாற்றப்பட்டு உள்ளன. கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட வேண்டுமானால் பிளாட்பாரத்தின் நீளமும், லூப் லைன் நீளத்தையும் அதிகரித்தால் மட்டுமே சாத்தியப்படும். பயணிகள் நலன் கருதி ரெயில்கள் பாதுகாப்பான முறையில் இயக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
கூட்ட நெரிசலில் பயணம்
சேலம் சிவதாபுரம் பகுதியை சேர்ந்த பிரியா:-
தொலைதூர பயணங்களுக்கு பஸ், கார் உள்ளிட்டவை காட்டிலும் ரெயில் பயணம் மிகவும் எளிதாக இருக்கிறது. முன்பதிவு செய்துவிட்டால் எந்த தொந்தரவும் இல்லாமல் சென்று வரலாம். அதேநேரத்தில் முன்பதிவு டிக்கெட் கிடைக்காதவர்கள் முன்பதிவு இல்லாத பெட்டியில் தான் பயணம் செய்து வருகின்றனர். சேலம் வழியாக கேரளா, சென்னை மற்றும் வட மாநிலங்களுக்கு தினசரி மற்றும் வாரந்திர என 50-க்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த ரெயில்களில் வட மாநிலங்களில் இருந்து வரும் புதுடெல்லி-திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், கவுகாத்தி எக்ஸ்பிரஸ், குர்லா எக்ஸ்பிரஸ், மும்பை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட ரெயில்களில் வட மாநிலத்தவர்கள் ஏராளமானோர் தமிழகத்துக்கும், கேரளாவுக்கும் வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் முன்பதிவு இல்லா பெட்டிகளில் தான் பயணம் செய்கின்றனர். இதனால் முன்பதிவு இல்லா பெட்டிகளில் சேலத்தில் இருந்து ஏறும் பயணிகளுக்கு இருக்கையில் உட்காருவதற்கு இடம் கிடப்பதில்லை. அதனால் பயணிகள் கூட்ட நெரிசலில் சிக்கி பயணம் செய்ய வேண்டிய நில ஏற்பட்டுள்ளது. ஆகையால் ரெயில்களில் கூடுதலாக முன்பதிவில்லா பெட்டிகளை இணைக்க வேண்டும்.
கைவிட வேண்டும்
தேவூர் பகுதியை சேர்ந்த அபிராமி:-
பெரும்பாலான மக்கள் பாதுகாப்பான பயணத்திற்கு ரெயில் போக்குவரத்தை தான் விரும்புகின்றனர். குறிப்பாக குடும்பத்துடன் நீண்ட தூரம் செல்பவர்கள் ரெயில்களில் தான் செல்கின்றனர். ஆனால் ரெயில்களில் முன்பதிவு டிக்கெட் கிடைக்காதவர்கள் பலர் முன்பதிவில்லாத பெட்டிகளில் தான் சென்று வருகின்றனர். வசதி படைத்தவர்கள் சொகுசாக பயணம் செய்ய முழுவதும் குளிர்சாதன வசதி கொண்ட ரெயில்களை ரெயில்வே நிர்வாகம் இயக்குகிறது. வருவாய்க்காக சொகுசு பெட்டிகளை கூடுதலாக இணைத்து கட்டணம் வசூலிக்கும் முறையை ரெயில்வே நிர்வாகம் கைவிட வேண்டும். அதேபோல் அனைத்து பகுதிகளுக்கும் சாதாரண குடிமக்கள் செல்லும் வகையில் படுக்கை வசதி கொண்ட சாதாரண கட்டண ரெயில்களை இயக்கவும் முன்வர வேண்டும்.
சேலம் ஜங்சன் பகுதியை சேர்ந்த வசந்தகுமார்:-
சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் பண்டிகை நாட்கள், தொடர் விடுமுறை மற்றும் வாரத்தின் கடைசி நாட்களில் ரெயிலில்களில் கூட்டம் அதிகளவு காணப்படுகிறது. பலர் முன்பதிவு டிக்கெட் இடம் கிடைக்காததால் ரெயிலின் முன்பதிவில்லா பெட்டியில் படிக்கட்டுகளில் உட்கார்ந்து பயணம் செய்வதை பார்க்க முடிகிறது. இந்த ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் போது ரெயிலில் இருந்து தவறி விழுந்து பலியாகும் சம்பவம் நடைபெறுகிறது. ஆகையால் சாதாரண நாட்களை தவிர்த்து மற்ற நாட்களில் கூடுதலாக முன்பதிவில்லா பெட்டிகளை இணைக்க வேண்டும்.
ஆன்மிக பயணம்
சேலம் பனமரத்துப்பட்டி பகுதியை சேர்ந்த கவிதா:-
65 வயதை கடந்தாலே பலர் ஆன்மிக சுற்றுலா பயணத்தை மேற்கொள்ள விரும்புவார்கள். வெளி மாநிலம் மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள பிரசித்திப்பெற்ற கோவில்களுக்கு சென்று தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் சென்று வருகின்றனர். அவர்கள் இதற்காக ரெயில் பயணங்களை தான் தேர்ந்தெடுத்து வருகின்றனர். சேலத்தில் இருந்து ஒரு சில ஊர்களுக்கு மட்டும் தான் ரெயில் இயக்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலான ரெயில்கள் மற்ற ஊர்களில் இருந்து புறப்பட்டு சேலம் வழியாக மட்டுமே வந்து செல்கின்றன.
இதனால் அந்த ரெயில்களில் முன்பதிவில்லாத பெட்டியில் செல்ல வேண்டும் என்றால் இடம் கிடைப்பதில்லை. இந்த நிலையில் ரெயில்களில் படுக்கை வசதி கொண்ட பெட்டிகளின் எண்ணிக்கையையும் குறைப்பது எந்தவிதத்தில் நியாயம்?. முன்பதிவு செய்யாத பெட்டிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க வேண்டும். ரெயில்வே நிர்வாகம் லாப நோக்கத்துடன் செயல்படாமல் சேவை மனப்பான்மையுடன் செயல்பட்டு பயணிகள் மத்தியல் நற்பெயரை வாங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.