செந்தில்பாலாஜியை யாராலும் காப்பாற்ற முடியாது விழுப்புரம் ஆர்ப்பாட்டத்தில் சிவிசண்முகம் எம்பி பேச்சு
தி.மு.க. தனது முழு ஆட்சியை பயன்படுத்தினாலும் செந்தில்பாலாஜியை யாராலும் காப்பாற்ற முடியாது என்று விழுப்புரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சி.வி.சண்முகம் எம்.பி. பேசினார்.
விலைவாசி உயர்வு, சட்டம்- ஒழுங்கு சீர்கேடு, ஊழல் முறைகேடு ஆகியவற்றை கண்டித்தும், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும், அவரது பதவியை நீக்காத தி.மு.க. அரசை கண்டித்தும் விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நேற்று விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு சக்கரபாணி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலாளர் செஞ்சி ராமச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. முத்தமிழ்செல்வன், நகர செயலாளர்கள் பசுபதி, முருகவேல், ஒன்றிய செயலாளர்கள் ராமதாஸ், கண்ணன், சுரேஷ்பாபு, பேட்டை முருகன், ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அர்ஜூணன் எம்.எல்.ஏ. வரவேற்றார்.
ஸ்தம்பித்த நிர்வாகம்
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சி.வி.சண்முகம் எம்.பி. கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
செந்தில்பாலாஜி என்றால் மக்கள் யாருக்கும் தெரியாது. 10 ரூபாய் அமைச்சர் என்றால்தான் எல்லோருக்கும் தெரியும். கோடிக்கணக்கில் கொள்ளையடித்து லஞ்ச ஊழல் வழக்கில் கைதான அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்காமல் உள்ளனர்.
ஏற்கனவே தி.மு.க. அரசின் நிர்வாகம் சரியில்லாத நிலையில் கடந்த 10 நாட்களாக முற்றிலும் செயல்படாமல் ஸ்தம்பித்துள்ளது. மழை வெள்ளத்தால் சென்னை மக்கள் தத்தளிக்கிறார்கள். ஆனால் திருவாரூரில் அவரது தந்தைக்கு கோட்டம் திறக்கிறார். இதுதான் இந்த அரசின் நிர்வாக நிலைமை.
படித்த இளைஞர்களுக்கு வேலை வாங்கித்தருவதாக கூறி பணம் மோசடி செய்த செந்தில்பாலாஜியை முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அமைச்சர் பதவியை விட்டு நீக்கினார். அதன் பின்னர் வந்த எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்காலத்தில், செந்தில்பாலாஜி வீட்டில் காவல்துறை மூலம் சோதனை நடத்தப்பட்டு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இறுதி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அப்போது 2016-ல், இன்றைக்கு முதல்-அமைச்சராக இருக்கிற ஸ்டாலின், கரூர் ஜமீன்தாராக இருக்கும் செந்தில்பாலாஜியை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும், எங்கள் ஆட்சி வந்தால் அவரை கைது செய்வோம் என்றும் முழக்கமிட்டார். ஆனால் ஸ்டாலின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு இவ்வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை.
யாராலும் காப்பாற்ற முடியாது
இந்த அரசு, அவரை காப்பாற்ற பார்க்கிறது. உச்சநீதிமன்ற உத்தரவிற்கு பிறகு அமலாக்கத்துறை வந்துள்ளது. ஆனால் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இருக்கிற காவல்துறை, செந்தில்பாலாஜியை இன்னும் எத்தனை நாட்கள் காப்பாற்ற போகிறீர்கள்? என்று நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
உங்கள் முழு ஆட்சியையும் பயன்படுத்தினாலும் செந்தில்பாலாஜியை யாராலும் காப்பாற்ற முடியாது.
இருதயத்தில் 3 இடங்களில் 90 சதவீத அடைப்பு ஏற்பட்டு 8 நாட்களாக உயிரோடு இருக்கிற ஒரு அதிசய மனிதர் தமிழ்நாட்டிலேயே செந்தில்பாலாஜி மட்டும்தான். விசாரணை தள்ளிப்போக வேண்டும் என்பதற்காக அவருக்கு சிகிச்சை அளிக்க தாமதிக்கிறார்கள். குற்றவாளிக்கு ஆதரவாக அமைச்சர் சுப்பிரமணியனும் செயல்படுகிறார். அவரை முதலில் அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்.
விலைவாசி உயர்வு
பால் விலை உயர்வு, மின்சார கட்டணம் உயர்வு, சாலை வரி உயர்வு இதற்கெல்லாம் காரணமான தி.மு.க. அரசுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.
தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சரியில்லை, இவற்றையெல்லாம் முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுப்பதில்லை. இங்கிருக்கிற ஒரு அமைச்சர், சாராய வியாபாரிகளுக்கு பாதுகாப்பு அளிக்கிறார். மற்றொரு அமைச்சர் சமூகவிரோதிகளுக்கு பாதுகாப்பு அளிக்கிறார்.
மோசடி வழக்கில் கைதாகி சிறையில் உள்ள செந்தில்பாலாஜியை உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்து நீக்குங்கள். ஏழை, எளிய மக்கள், மாணவர்களுக்காக ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை நிறைவேற்றுங்கள், விலைவாசி உயர்வையும் கட்டுப்படுத்துங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.