பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவை யாராலும் காப்பாற்ற முடியாது: முதல்-அமைச்சர் பேச்சு
சமூகநீதி, ஜனநாயகம், அரசியலமைப்பு சட்டம் சிதைந்துவிடும். அதனால் பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவை யாராலும் காப்பாற்ற முடியாது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
திருச்சி,
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ளது. இந்த தேர்தலையொட்டி தி.மு.க. சார்பில் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்காக தமிழகத்தில் உள்ள தி.மு.க. மாவட்டங்களை 5 மண்டலமாக பிரித்து மண்டலம் வாரியாக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு பயிற்சி பாசறை கூட்டம் நடத்த தி.மு.க. தலைமை திட்டமிட்டது. அதன்படி முதல்கட்டமாக டெல்டா மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ராம்ஜிநகரில் நேற்று நடந்தது.
இந்த கூட்டத்தில் டெல்டா மண்டலங்களை சேர்ந்த 15 தி.மு.க. மாவட்டத்துக்குட்பட்ட 12 ஆயிரத்து 645 வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்தநிலையில் பயிற்சி பாசறை கூட்டத்துக்கு தி.மு.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள்
கடந்த சட்டமன்ற தேர்தலின்போது திருச்சியில் மாநாடுபோல் நடந்த பொதுக்கூட்டம் தான் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு அடித்தளம் அமைத்த சிறப்பான கூட்டமாக அமைந்தது. அதுபோல் இந்த கூட்டமும் மாநாடுபோல் பிரமாண்டமாக நடத்தப்படுகிறது.
15 மாவட்டங்களில் உள்ள 12,645 வாக்குச்சாவடிகளில் இருந்து தலா ஒவ்வொரு பொறுப்பாளர்கள் இங்கு வந்துள்ளீர்கள். நாடாளுமன்ற தேர்தலை நாம் எதிர்நோக்கி உள்ளோம். கழக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் என்ற நிலையை அடைந்துள்ள உங்களுக்கு வாழ்த்துகள், பாராட்டுகள்.
கழகம் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் பணியை சிறப்பாக செய்து வருகிறோம். வாக்குச்சாவடி விவரம் சரியாக உள்ளதா?. போலி வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளார்களா?. இறந்தவர்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளதா? ஆகியவற்றை முழுமையாக சரிபார்ப்பது வாக்குச்சாவடி பொறுப்பாளர்களின் முதல் பணி. தினமும் வாக்காளர்களை சந்தித்து நமது சாதனைகளை எடுத்து சொல்வது 2-வது பணி. வாக்களிக்காதவர்களையும், வாக்களிக்க வரவழைப்பது 3-வது பணி. இந்த 3 பணிகளையும் சிறப்பாக செயல்படுத்த நீங்கள் வாக்காளர்கள் குடும்பத்துடன் நெருக்கமான நட்பு கொண்டு இருக்க வேண்டும்.
மாவட்ட செயலாளர்கள் நிறைவேற்ற வேண்டும்
வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் வைக்கிற தகுதியான கோரிக்கைகளுக்கு மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் கண்டிப்பாக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இதை நான் மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்களிடம் பலமுறை கூறினாலும், மீண்டும், மீண்டும் நினைவுபடுத்துகிறேன். உங்களுடைய தகுதியான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என நான் உறுதி அளிக்கிறேன்.
என்னை பொறுத்தவரை நம்மை நிராகரிக்கக்கூடியவர்களே இருக்கமாட்டார்கள் என்று நினைக்கிறேன். ஏனென்றால் அனைவருக்கும் பொதுவான ஆட்சியை, எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத அளவுக்கு நடத்துகிறோம். இதனால் மக்கள் நம் ஆட்சி மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர்.
சமூக ஊடகம்
நமக்கு எதிராக அவதூறு, பொய் செய்திகளை பரப்பிட ஒரு கூட்டம் சுற்றிக்கொண்டு இருக்கிறது. பொய்களுக்கு ஆயுள் குறைவு. அவர்கள் பொய்யை சொல்லிக்கொண்டே இருக்கட்டும். நாம் திரும்ப, திரும்ப நமது அரசின் திட்டங்களையே பேசுவோம்.
நீங்கள் ஒவ்வொருவரும் சமூக ஊடகங்களில் கட்டாயம் கணக்கு தொடங்கி, நம் கொள்கைகள், அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்து சொல்லுங்கள். தேவையில்லாத பிரச்சினைகளில் சிக்கி கட்சிக்கு கெட்டப்பெயர் ஏற்படுத்தி தரக்கூடாது.
கவர்னர் இருக்க வேண்டும்
தெரிந்தோ, தெரியாமலோ கவர்னர் நமக்கு பிரசாரம் செய்து கொண்டு இருக்கிறார். ஆக அவரை மாற்ற வேண்டும் என்று கூட நான் சொல்லவில்லை. தேர்தல் வரை அவர் இருக்க வேண்டும். இன்னும் வாக்குகள் நமக்கு அதிகரிக்கும். நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் மிக முக்கியமான தேர்தல். யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை காட்டிலும் யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பது தான் முக்கியம்.
புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளை மட்டுமல்ல, இந்தியா முழுவதும் நமது அணி வெற்றி பெற வேண்டும். ஏனென்றால் இந்தியாவின் கட்டமைப்பை பா.ஜனதா சிதைத்துவிட்டது.
முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இல்லையென்றால் தமிழ்நாட்டை மட்டுமல்ல, இந்தியாவையே யாராலும் காப்பாற்ற முடியாது. பா.ஜனதா. ஆட்சி தொடர்ந்தால், இந்தியாவின் சமூகநீதி, அரசியல் அமைப்பு சட்டத்தை யாராலும் காப்பாற்ற முடியாது. மீண்டும் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் ஜனநாயகமே இருக்காது. ஏன் தமிழ்நாடு என்ற மாநிலமோ, அதற்கான சட்டமன்றமோ, முதல்வரோ, அமைச்சர்களோ, எம்.எல்.ஏ.க்களோ இருக்கமாட்டார்கள். அத்தனையையும் காலி செய்துவிடுவார்கள். உள்ளாட்சி அமைப்புகள் இருக்காது. இது தான் அனைத்து மாநிலங்களுக்கும் நடக்கும்.
புதிய நாடாளுமன்றத்தில் 888 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தில் தங்களது விருப்பங்களின் அடிப்படையில் இருக்கைகள் போட நினைக்கிறார்கள். மக்கள் தொகை கணக்கெடுப்பு என்ற பெயரால் மாநிலங்களில் பிரதிநிதித்துவத்தை குறைக்க பார்க்கிறார்கள். குடும்ப கட்டுப்பாட்டுமுறையை முறையாக பின்பற்றி வரும் தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படும். வடமாநிலங்களில் எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகமாகும். நாம் 40 தொகுதிகளில் வெற்றி பெற்றாலும், வடமாநில எம்.பி.க்களை வைத்து ஆட்சியை பிடிக்கலாம் என கணக்கு போடுகிறார்கள். தமிழகத்தின் குரலை இதன் மூலம் தடுக்க பார்க்கிறார்கள். எனவே தான் இந்த தேர்தல் மிக முக்கியமானது.
இந்தியா கூட்டணி
பல்வேறு தேச மொழியை பேசுபவர்களுக்கு எதிரான சிந்தனை கொண்ட கட்சி தான் பா.ஜனதா. அந்த ஒற்றை கட்சி தான் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள். ஒற்றை கட்சி அமைந்தால் ஒரே ஆள் கையில் அதிகாரம் போய்விடும். அதனால் தான் இந்த தேர்தலில் பா.ஜனதா வீழ்த்தப்பட வேண்டும். இதற்காகவே 26 கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளோம். 26 கட்சிகள் அடங்கிய கூட்டணிக்கு இந்தியா என்று பெயர் சூட்டி உள்ளோம். இந்தியாவை காப்பாற்ற போவது இந்தியா கூட்டணி தான். இதை பிரதமர் மோடியால் தாங்கி கொள்ள முடியவில்லை. பா.ஜ.க.வை எதிர்க்க வலுவான அணியை அமைத்துவிட்டார்களே என்று நினைத்து அவர்கள் ஏதேதோ பேசுகின்றனர். இந்த நோக்கத்தை இப்போது அல்ல, ஓராண்டு காலமாகவே சொல்கிறேன். அதனால் தான் அவர்களுக்கு என் மீது கோபம்.
தி.மு.க.வை வாரிசுகளுக்கான கட்சி என பிரதமர் கூறுகிறார். இதைக்கேட்டு, கேட்டு புளிச்சுப்போச்சு. வேறு ஏதாவது கண்டுபிடித்து சொல்லுங்கள். நான் சொல்கிறேன் இது வாரிசுகளுக்கான கட்சி தான். ஆரியத்தை வீழ்த்தும் திராவிடத்தின் வாரிசு நாங்கள். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் ஆகியோரின் வாரிசுகள் நாங்கள். இதை தைரியமாக பெருமையோடு என்னால் சொல்ல முடியும். பா.ஜ.க. யாருடைய வாரிசு?. கோட்சேவின் வாரிசுகள் தான் நீங்கள். உங்களால் தைரியமாக சொல்ல முடியுமா?. அப்படி சொல்வதற்கான தைரியம் உங்களுக்கு உண்டா?. குஜராத் மாநிலத்தில் 2002-ம் ஆண்டு என்ன நடந்தது என்பதை இந்த நாடு மறக்கவில்லை. அன்று குஜராத்தில் நடந்ததை இன்று மணிப்பூர் நினைவூட்டுகிறது.
எடப்பாடி பழனிசாமி பேசினாரா?
மே மாதம் தொடங்கிய வன்முறையை இன்றுவரை மணிப்பூரை ஆளும் பா.ஜ.க.வால் தடுக்க முடியவில்லை. ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க. அரசாலும் தடுக்க முடியவில்லை. வன்முறையாளர்களும், மாநிலத்தை ஆளும் பா.ஜ.க. அரசின் மணிப்பூர் போலீசும் கைக்கோர்த்து கொண்டு மக்களை தாக்கிக்கொண்டு இருக்கிறது. இதை நான் சொல்லவில்லை. பா.ஜ.க.வை ஆளும் மணிப்பூர் எம்.எல்.ஏ. பாவோலியன்லால் ஹாக்கி சொல்லியிருக்கிறார்.
ஒற்றுமையாக இருக்கக்கூடிய மக்களை வேற்றுமைப்படுத்தி அவர்களின் மனதில் மனக்கசப்பை உருவாக்கி அரசியல் ஆதாயம் தேடும் நிகழ்வு தான் இன்று மணிப்பூர் பற்றி எரிகிறது. அ.தி.மு.க. பெயரில் இயங்கும் கொத்தடிமை கூட்டத்தில் யாராவது மணிப்பூர் பற்றி பேசினார்களா?. வாய்க்கு வந்ததை பேசுகிறாரே எடப்பாடி பழனிசாமி, அவர் மணிப்பூரை ஆளும் முதல்-மந்திரி பற்றியோ, மத்திய பா.ஜ.க. அரசையோ கண்டித்தாரா?. எடப்பாடி பழனிசாமியை பக்கத்தில் வைத்து கொண்டு ஊழல் குறித்து பிரதமர் பேசுகிறார்.
ஜனநாயக கட்டமைப்பை காக்க...
அ.தி.மு.க.வினர் மீதான ஊழல் வழக்குகளை காட்டி அவர்களை அடிபணிய வைத்தது பா.ஜ.க. கடந்த காலத்தில் தமிழகத்தில் அனைத்து உரிமைகளையும் அடமானம் வைத்தது அ.தி.மு.க. ஆக உரிமைகளை கைவிட்டவர்களும், காவு வாங்கியவர்களும் இன்று கைக்கோர்த்து வருகிறார்கள். இவர்களை இந்த தேர்தலில் நாம் முழுமையாக வீழ்த்தியாக வேண்டும். இந்தியாவில் மற்ற மாநிலங்களையும் மணிப்பூராக்கி விடாமல் தடுக்க வேண்டும். தமிழை, தமிழ்நாட்டை, தமிழ் மக்களை காக்க வேண்டுமானால் இந்தியாவின் ஜனநாயக கட்டமைப்பை காப்பாற்றியாக வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வீரவாள் மற்றும் கேடயம் பரிசாக வழங்கப்பட்டது.
கூட்டத்தில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சிவசங்கர், ரகுபதி, மெய்யநாதன், டி.ஆர்.பி.ராஜா, அன்பில்மகேஷ் பொய்யாமொழி, ஆ.ராசா எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.