கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் தகுதியான ஒரு பயனாளியும் விடுபடக்கூடாது: தலைமைச் செயலாளர் உத்தரவு


கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் தகுதியான ஒரு பயனாளியும் விடுபடக்கூடாது: தலைமைச் செயலாளர் உத்தரவு
x

ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் தகுதியான ஒரு பயனாளியும் விடுபடக்கூடாது என்று அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டு உள்ளார்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின் போது, தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட சமூகநீதித் திட்டங்களிலேயே ஒரு மாபெரும் முன்னெடுப்பாக, ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கிடும் வகையில் அமைந்திடும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை அறிவித்தார்.

இந்தத் திட்டத்தை முறையாகச் செயல்படுத்துவதற்காக 2023-2024-ம் ஆண்டு பட்ஜெட் அறிக்கையில் ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம், அண்ணா பிறந்த நாளான வரும் செப்டம்பர் 15-ந்தேதி தொடங்கப்பட உள்ளது.

ஆலோசனை

இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 7.7.2023 அன்று காணொலிக் காட்சி வாயிலாக, மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அந்த ஆலோசனைக் கூட்டத்தின் அடிப்படையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்துவதற்கான அரசாணை 10.7.2023 அன்று வெளியிடப்பட்டது.

அதன் அடிப்படையில் நேற்று சென்னை, தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்துவது குறித்து கண்காணிப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், தலைமைச் செயலாளர், திட்டத்தை சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் செயல்படுத்துவதற்கு கண்காணிப்பு அலுவலர்களுடன் விரிவான ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் அவர் பேசியதாவது:-

வசதிகள்

கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட அரசாணையில் வெளியிடப்பட்டு உள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி அனைத்து முன்னேற்பாட்டு பணிகள், நடவடிக்கைள் கண்காணித்து உறுதி செய்யப்பட வேண்டும். விண்ணப்பதாரரின் தகுதிகள் மற்றும் தகுதியின்மை, விண்ணப்பிக்கும் நடைமுறைகள், பொருளாதாரத் தகுதிகள் அரசாணையில் விரிவாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள, கால அட்டவணை, திட்டமிடுதல் ஒருங்கிணைத்தல் மற்றும் செயலாக்கம், கட்டுப்பாட்டு அறை, தகவல் தொடர்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள், முகாம்களை ஏற்பாடு செய்தல், முகாம் இடங்கள் தேர்வு, முகாம் நடைபெறும் நேரம் மற்றும் நாள்கள், உடனடியாக விண்ணப்பங்களைப் பதிவு செய்தல்,

முகாம்களில் அடிப்படை வசதிகள், விண்ணப்பதாரர் காத்திருக்கும் அறைகள், பயோமெட்ரிக் சாதனங்களைப் பெற்றுச் சரிபார்த்தல் பகிர்ந்தளித்தல், விண்ணப்பங்கள் பெறுதல் சரிபார்ப்பு மற்றும் பகிர்ந்தளித்தல், கூட்ட நெரிசல் தவிர்ப்பு ஏற்பாடுகள், காவல்துறை பாதுகாப்பு, நிழற்கூடங்கள், குடிநீர் வசதிகள், மின்சார வசதி, மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கான வசதிகள், தீத்தடுப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும், முன்னேற்பாடுகளும் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும்.

கள ஆய்வு

எந்தவொரு தகுதியான பயனாளியும் விடுபட்டுவிடக் கூடாது. திட்டப் பயனாளிகள் கண்டறியும் செயல்பாடுகள், பணி முன்னேற்றம் குறித்து கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும். முதல் கட்டமாக 19.7.2023 அன்று கண்காணிப்பு அலுவலர்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் நேரில் சென்று களஆய்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் வளர்ச்சி ஆணையர் முருகானந்தம், துறைச் செயலாளர்கள் மற்றும் அரசு உயர் அலு வலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story