"சென்னையில் கனமழை காரணமாக உயிரிழப்புகள் ஏதும் இல்லை" - அமைச்சர் சாத்தூர் ராமசந்திரன் தகவல்


சென்னையில் கனமழை காரணமாக உயிரிழப்புகள் ஏதும் இல்லை - அமைச்சர் சாத்தூர் ராமசந்திரன் தகவல்
x

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பெரிய அளவு பாதிப்புகள் இல்லை என்று அமைச்சர் சாத்தூர் ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

நேற்று இரவு முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது. விடிய விடிய இடி, மின்னலுடன் கனமழையாக கொட்டி தீர்த்தது. சென்னை நகர் பகுதியில் பெய்த மழை காரணமாக முக்கிய சாலைகள் முழுவதும் வெள்ளக்காடாக மாறியது.

இந்த நிலையில், சென்னையில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

சென்னையில் கனமழை காரணமாக உயிரிழப்புகள், வீடு மற்றும் பொருட்கள் சேதம் ஏதும் இல்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பெரிய அளவு பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. நேற்றிரவு முதல் பெய்த கனமழையால் சென்னையில் 6 மரங்கள், 38 கிளைகள் முறிந்து விழுந்துள்ளன.

கடந்த முறை அதிகம் பாதிக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளோம். சுரங்கப்பாதைகளில் தேங்கும் தண்ணீரை உடனடியாக மோட்டார்கள் மூலம் அகற்றி வருகிறோம். 22 சுரங்கப் பாதைகளில் ஒரு சுரங்கப் பாதையில் மட்டும் தான் தண்ணீர் தேங்கி நிற்கிறது. வியாசர்பாடி கணேசபுரம் சுரங்கப்பாதையில் மட்டும்தான் தற்போது தண்ணீர் உள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின் திருவாரூரில் இருந்தபடி மழை பாதிப்பு குறித்து அதிகாரிகளிடம் பணிகளை கேட்டறிந்து உரிய அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறார். பருவமழை மட்டுமின்றி இதுபோன்று திடீரென பெய்யும் மழையை எதிர்கொள்ளவும் தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story