நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டப்படவில்லை - மதுரை ஐகோர்ட்டில் தகவல்
நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டப்படவில்லை என மதுரை ஐகோர்ட்டில் அரசு வக்கீல் தெரிவித்துள்ளார்.
மதுரை,
மதுரை சேர்ந்த சுகுமார் தாக்கல் செய்த மனுவில், திருமங்கலத்தை அடுத்த சாத்தங்குடி கிராமத்தில் உள்ள ஊருணி நீர் பிடிப்பு பகுதியாக கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த 2015-ம் ஆண்டிலேயே அரசு கட்டிடம் ஒன்றை கட்டுவதற்காக முடிவு எடுக்கப்பட்டபோது நீர்ப்பிடிப்பு பகுதி என்பதால் கட்டிடம் கட்ட எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது அதே இடத்தில் அரசின் இணையதள மையம் கட்ட முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
நீர் பிடிப்பு பகுதியில் கட்டிடம் கட்டக்கூடாது என்ற உத்தரவு உள்ளது. மேலும் நீர்பிடிப்பு பகுதியில் கட்டும் கட்டிடம் விரைவில் பலவீனம் அடையும். எனவே திருமங்கலம் சாத்தங்குடி ஊருணி பகுதியில் அரசின் இணையதள மையம் அமைக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாரயண பிரசாத் ஆகியோர் முன்பு விசாரணக்கு வந்தது.
அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, மனுதாரர் குறிப்பிடுவது போல் நீர் பிடிப்பு பகுதியில் எந்த கட்டிடமும் கட்டப்போவதாக எந்த அறிவிப்பும் அறிவிக்கப்படவில்லை என்றார்.
இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.