ரூ.26 லட்சத்தில் ஊராட்சி மன்ற புதிய அலுவலக கட்டிடம்
வாய்மேடு அருகே பஞ்சநதிக்குளம் நடுசேத்தியில் ரூ.26 லட்சத்தில் ஊராட்சி மன்ற புதிய அலுவலக கட்டிடத்தை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் திறந்து வைத்தார்.
வாய்மேடு:
வாய்மேடு அருகே பஞ்சநதிக்குளம் நடுசேத்தியில் ரூ.26 லட்சத்தில் ஊராட்சி மன்ற புதிய அலுவலக கட்டிடத்தை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் திறந்து வைத்தார்.
ஊராட்சி அலுவலக கட்டிடம்
வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம் பஞ்சநதிக்குளம் நடுசேத்தி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சத்து 99 ஆயிரம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை பொது மக்கள் பயன்பாட்டிற்கு கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் திறந்து வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி பஞ்சநதிக்குளம் நடுசேத்தி ஊராட்சியில் ரூ.9 லட்சத்து 98 ஆயிரம் மதிப்பில் ஆவுடைக்கோன்காடு மருத்துவர் சாலையை தார்ச்சாலையாக மாற்றுதல், ஆவுடைக்கோன்காடு- கூழையன்தோப்பு சாலையை ரூ.2 லட்சத்து 11 ஆயிரம் மதிப்பில் தார்ச்சாலையாக மாற்றுதல், கணபதிதேவன்காடு-நொண்டிவீரன் சாலையை ரூ.5 லட்சத்து 61 ஆயிரம் மதிப்பில் தார் சாலையாக்குதல் போன்ற பணிகள் நிறைவுபெற்றன.
வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு
தொடர்ந்து பெருமைக்கோன்காடு சண்முகா உதவிபெறும் தொடக்கப்பள்ளி அருகில் ரூ.4 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் கழிவுநீர் வடிகால் உறிஞ்சிகுழியுடன் அமைத்தல், கணபதிதேவன்காடு பகுதியில் ரூ.4 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் பைப்லைன் விரிவாக்கம் செய்து 48 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகள் நிறைவுற்றன.
மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் அடப்போடை சாலையினை ரூ.14 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் 700 மீட்டர் ஓரடுக்கு ஜல்லி சாலை ஆக்குதல், பெருமைகோன்காடு பகுதியில் ரூ.14 லட்சத்து 59 ஆயிரம் மதிப்பில் உணவு தானிய சேமிப்பு கிடங்கு அமைத்தல், ஆவுடைக்கோன்காடு பகுதியில் ரூ.7 லட்சத்தில் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டுதல், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ஆவுடைக்கோன்காடு பகுதியில் ரூ.6 லட்சத்து 57 ஆயிரத்தில் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டுதல் போன்ற பணிகளும் நிறைவு பெற்றன.
சாலை மேம்பாட்டு பணிகள்
தமிழ்நாடு ஊரக சாலை மேம்பாட்டு திட்டத்தின் கிழ் ரூ.23 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பில் கணபதிதேவன்காடு பகுதியில் சாலை மேம்பாடு செய்தல் போன்ற பணிகள் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான இடத்தை தானமாக வழங்கியவர்களுக்கும், அங்கன்வாடி மையம், மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்க இடத்தை தானமாக வழங்கியவர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்களையும், சிறந்த ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பொன்னாடை போர்த்தியும கவுரவிக்கப்பட்டது.
மாணவ-மாணவிகளுக்கு பரிசு
தொடர்ந்து பொதுமக்களுக்கு மரக்கன்றுகளையும், கடந்த 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்வில் ஊராட்சி அளவில் முதலிடம் மற்றும் 2-ம் இடம் பிடித்த மாணவ-மாணவிகளுக்கு பரிசுத்தொகையினையும் கலெக்டர் வழங்கினார்.
முன்னதாக ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சேகர் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் சத்யகலா செந்தில்குமார் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் தேவி செந்தில், வீரத்தங்கம், தமிழரசி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் பிரபாகரன் நன்றி கூறினார்.