நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்குவிஷ பாம்புடன் வந்த பெண்ணால் பரபரப்பு


நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்குவிஷ பாம்புடன் வந்த பெண்ணால் பரபரப்பு
x

புதிதாக கட்டிய வீட்டிற்கு மின்சாரம் வழங்காததால் நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு விஷ பாம்புடன் வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி

புதிதாக கட்டிய வீட்டிற்கு மின்சாரம் வழங்காததால் நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு விஷ பாம்புடன் வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

பாம்புடன் வந்த பெண்

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. மானூர் தாலுகா வன்னிக்கோனேந்தல் தெற்கு தெருவைச் சேர்ந்த முருகன் மனைவி சமரச செல்வி தன்னுடைய மகளுடன் மனு கொடுக்க வந்தார்.

அப்போது, அவர் தனது பையில் வைத்திருந்த கொடிய விஷத்தன்மை கொண்ட கண்ணாடி விரியன் பாம்பை கையில் எடுத்து காண்பித்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கலெக்டரிடம் மனு

இதையடுத்து அவர் கூறும்போது, தனது வீட்டுக்கு மின் இணைப்பு இல்லாததால் வீட்டுக்குள் வந்த பாம்பை அடித்து கொன்று எடுத்து வந்ததாகவும், வீட்டுக்குள் பாம்பு வந்ததை கலெக்டர் நம்ப வேண்டும் என்பதற்காக அதை எடுத்து வந்ததாகவும் கூறினார்.

சமரச செல்வியிடம் இருந்த பாம்பை போலீசார் வாங்கி அப்புறப்படுத்திய பின்னர், அவரை கலெக்டர் கார்த்திகேயனிடம் மனு கொடுக்க அழைத்து சென்றனர். கலெக்டரிடம் சமரச செல்வி கொடுத்த மனுவில் கூறி இருப்பதாவது:-

மின் இணைப்பு வேண்டும்

முதல்-அமைச்சரின் சூரிய ஒளி மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டத்தின் கீழ் கடந்த 2019-20-ம் ஆண்டில் எனக்கு வீடு கட்ட அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி வீடு கட்டி முடித்து விட்டோம்.

அந்த வீட்டுக்கு மின் இணைப்பு, வீட்டு வரி ரசீது, குடிநீர் இணைப்பு பெறுவதற்கு முயற்சிகள் செய்தோம். ஆனால் 3 பேர் சேர்ந்து பஞ்சாயத்து எழுத்தரிடம் ரசீது, குடிநீர் இணைப்பு வழங்க கூடாது என்று கூறி இடையூறு செய்கிறார்கள். மேலும் மின் இணைப்பும் கிடைக்க விடாமல் தடை செய்கிறார்கள். இதுகுறித்து கேட்டதற்கு என்னை அடித்து, கொலை மிரட்டல் விடுத்தனர்.

போலீஸ் நிலையத்தில் வழக்கு

இதுகுறித்து தேவர்குளம் போலீஸ் நிலையத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. ஆனால் 4 ஆண்டுகள் ஆகியும் எனது பசுமை வீட்டுக்கு மின் இணைப்பு கிடைக்கவில்லை. இதனால் எனது 2 குழந்தைகள் படிக்க முடியாமல் சிரமப்படுகிறார்கள். மேலும் இரவு நேரத்தில் மின்விளக்கு இல்லாததால் பாம்புகள் தொல்லை அதிகமாக உள்ளது. பாம்பு கடித்து ஆடு, கோழிகள் பலியாகி உள்ளன.

இதுதொடர்பாக கலெக்டர், போலீஸ் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே ஆதார், ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டையை ஒப்படைக்கிறேன். எனவே கலெக்டர் இதில் தனிக்கவனம் செலுத்தி உடனே மின் இணைப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறிஉள்ளார்.

அரை நிர்வாண விவசாயி

இதேபோல் நாங்குநேரி அருகே உள்ள இளங்குளம் கல்மாணிக்கபுரத்தை சேர்ந்த விவசாயி மாடசாமி என்பவர் கொக்கிரகுளம் எம்.ஜி.ஆர். சிலை பகுதியில் இருந்து கலெக்டர் அலுவலகம் நோக்கி இடுப்பில் துண்டு மட்டும் கட்டிக்கொண்டு அரை நிர்வாணமாக நடந்து வந்தார்.

கலெக்டர் அலுவலக நுழைவு வாசல் அருகில் அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் 'அன்பு சுவர்' பெட்டியில் கிடந்த வேட்டி, சட்டையை எடுத்து அவருக்கு அணிவித்து கலெக்டரிடம் மனு கொடுக்க செய்தனர்.

சொத்து ஆவணம்

அதில், 'எனக்கு 2 ஆண், 4 பெண் மக்கள் உள்ளனர். எனது மனைவி 4 ஆண்டுகளுக்கு முன்பு காலமாகி விட்டார். என்னுடைய மக்கள் என்னை கவனிக்காததால், எனது விவசாய நிலத்தின் மூலம் மட்டுமே கிடைக்கும் குறைந்த வருமானத்தை கொண்டு வாழ்ந்து வருகிறேன்.

இந்த நிலையில் என்னுடைய இளைய மகன் வேல்பாண்டி, 5 சென்ட் இடம் வீடு கட்டுவதற்கு கேட்டபடி எழுதி கொடுத்தேன். ஆனால் அவர் எனது மொத்த சொத்துக்களையும் எழுதி வாங்கி இருக்கிறார். எனவே அந்த ஆவணத்தை ரத்து செய்வதுடன், வயதான என்னை கவனித்து பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறப்பட்டு இருந்தது.


Next Story