திருப்பரங்குன்றம் அருகே குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
திருப்பரங்குன்றம் அருகே குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றத்தை அடுத்த திருநகர் 3-வது பஸ் நிறுத்தம் அருகே மதுரை மாநகர் போலீஸ் வாகன சோதனை சாவடி அமைந்து. இதன் பக்கவாட்டில் தனக்கன்குளம் பிரிவு உச்சிக் கருப்பணசுவாமி கோவிலுக்குசெல்லும் வழியில் குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் கசிந்தது. அதை உடனடியாக சரிசெய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் வலியுறுத்தினர். ஆனால் நடவடிக்கை இல்லை. இதனால் தண்ணீர் கசிந்த இடமானது தற்போது பெரும் பள்ளமாக உருவாகி தண்ணீர் தேங்கி உள்ளது. தேங்கிய தண்ணீரில் குப்பை, கழிவுகள் சிதறி கிடப்பதால் கொசு உற்பத்தியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. கோடைகாலம் நெருங்கி வரும் இந்த கால கட்டத்தில் குடி தண்ணீர் சேமிக்கப்பட்டு தேவைக்கு பயன்படுத்த வேண்டும். ஆனால் உடைந்த குழாயை சரி செய்வது யார்? என்ற நிலையில் அதிகாரிகள் பாராமுகமாக இருப்பது ஏனோ? தெரியவில்லை. இனியாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரடியாக பார்வையிட்டு போர்க்கால அடிப்படையில் உடைந்த குழாயை சீரமைப்பதோடு, குளமாக தேங்கி உள்ள தண்ணீரில் குப்பை, கழிவுகளை அகற்றி சுகாதாரம் பேணி காக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.