பெரியகுளம் அருகேஅரசு பஸ் கண்டக்டருக்கு கொலை மிரட்டல்:11 பேர் மீது வழக்கு
பெரியகுளம் அருகே அரசு பஸ் கண்டக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ஆண்டிப்பட்டியில் இருந்து பெரியகுளம் நோக்கி கடந்த 14-ந் தேதி அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. பஸ்சில் கண்டக்டராக பெரியகுளம் வடக்கு பாரஸ்ட் ரோட்டை சேர்ந்தவர் கணேசன் (வயது 47) என்பவர்் இருந்தார்.
பெரியகுளம் அருகே வடுகப்பட்டியில் பஸ் நின்றது. அப்போது பஸ்சில் சிலர் ஏறினர். அவர்களிடம் கணேசன் டிக்கெட் கேட்டார். அப்போது அவர்கள் எங்களிடமே டிக்கெட் கேட்கிறாயா என அவரை மிரட்டி தாக்கினர்.
மேலும் பால்பாண்டி என்பவர் பஸ்சின் முன்பு ஆட்டோவை நிறுத்தி மறித்தார். இதையடுத்து ஆட்டோவில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கணேசன் தென்கரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இந்த சம்பவம் தொடர்பாக வடுகப்பட்டியை சேர்ந்த பால்பாண்டி, கர்ணா, ராமச்சந்திரன், விருமன், கார்த்தி, ராதாகிருஷ்ணன் உள்பட 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.