குறிஞ்சிப்பாடி அருகே சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் தரிசனம்
குறிஞ்சிப்பாடி அருகே சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
குறிஞ்சிப்பாடி அடுத்த திருத்தினைநகரில் சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் காலையில் அனுக்ஞை பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி, ரக்ஷாபந்தனம், முதல் கால யாகசாலை பூஜைகள், மூலமந்திர ஹோமம் நடைபெற்றது.
பின்னர் நேற்று காலையில் 2-ம் கால யாகசாலை பூஜைகள், நாடி சந்தானம், 2-ம் கால யாக சாலை பூஜை, பூர்ணாகுதி நடந்தது. இதையடுத்து யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனிதநீர் அடங்கிய கலசம் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு சக்தி மாரியம்மன் கோவில் கோபுர கலசத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது பக்தர்கள் ஓம் சக்தி, ஓம் சக்தி என்ற கோஷங்கள் எழுப்பியபடி தரிசனம் செய்தனர்.
சாமி வீதி உலா
தொடர்ந்து மூலவருக்கும், பரிவார தெய்வங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து 500-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் இரவில் சாமி வீதிஉலா நடைபெற்றது.விழாவில் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.