கோபி அருகேபவானி ஆற்றில் குதித்து கள்ளக்காதல் ஜோடி தற்கொலை
கோபி அருகே பவானி ஆற்றில் குதித்து கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்டனா்.
டி.என்.பாளையம்
கோபி அருகே பவானி ஆற்றில் குதித்து கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டது. ஒரே துணியால் கட்டப்பட்ட நிலையில் 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.
மிதந்த உடல்கள்
ஈரோடு மாவட்டம் கோபி பெரிய கொடிவேரி அருகே செல்லும் பவானி ஆற்றில் நேற்று காலை 11 மணி அளவில் அந்த பகுதியை சேர்ந்த சிலர் குளிப்பதற்காக சென்றனர். அப்போது தண்ணீரில் ஒரு ஆண் மற்றும் பெண்ணின் உடல்கள் மிதந்தன. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனே இது குறித்து பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, உடல்களை மீட்டு விசாரணை நடத்தினர். பிணமாக மிதந்த ஆணுக்கு சுமார் 35 வயது முதல் 40 வரையும், பெண்ணுக்கு சுமார் 35 வயது இருக்கும். 2 உடல்களும் ஒரே துணியால் கட்டப்பட்டு இருந்தன.
பரபரப்பான தகவல்கள்
இதைத்தொடர்ந்து போலீசார் 2 உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிணமாக கிடந்த 2 பேரின் உடல்கள் ஒரே துணியால் கட்டப்பட்டு இருந்ததால், ஏதேனும் பிரச்சினை காரணமாக கணவன்-மனைவி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது உறவினர்களா? அல்லது கள்ளக்காதல் ஜோடியா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் பரபரப்பான தகவல்கள் கிடைத்தன. அதன் விவரம் வருமாறு:-
திருப்பூர் மாவட்டம் செட்டிபாளையம் இந்திராநகரை சேர்ந்தவர் சரவணன் (வயது 38). தனியார் நிறுவனத்தில் தையல்காரராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். திருப்பூர் திருமுருகன்பூண்டி நெசவாளர் காலனியை சேர்ந்தவர் கணேசன். அவருடைய மனைவி ராஜேஸ்வரி (36). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
கள்ளக்காதல் ஜோடி
சரவணன் வேலை பார்க்கும் நிறுவனம் அருகே கணேசன் இறைச்சி கடை வைத்து நடத்தி வருகிறார். அந்த கடைக்கு சரவணன் அடிக்கடி வந்து செல்வார். ராஜேஸ்வரியும் இறைச்சி கடைக்கு வருவார். அப்போது சரவணனுக்கும், ராஜேஸ்வரிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் கடந்த 6 மாதங்களாக பழகி வந்துள்ளனர். இதனால் அடிக்கடி தனிமையில் இருந்துள்ளனர்.
இதனிடையே அவர்களது கள்ளக்காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவந்ததால், அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சரவணனும், ராஜேஸ்வரியும் அவமானமடைந்தனர்.
தற்கொலை
இதைத்தொடர்ந்து 2 பேரும் 9-ந் தேதி அன்று வீட்டை விட்டு வெளியேறி ஈரோடு மாவட்டம் கோபி அருகே பெரியகொடிவேரி பகுதிக்கு வந்துள்ளனர். "இனி 2 பேரும் சேர்ந்து வாழதான் முடியாது சேர்ந்து சாவோம்" என்ற முடிவுக்கு வந்தனர். பின்னர் சரவணனும், ராஜேஸ்வரியும் ஒன்றாக தங்கள் உடல்களை ஒரே துணியால் கட்டி அங்கு ஓடும் பவானி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.
மேலும் இது தொடர்பாக பங்களாப்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்காதல் ஜோடி ஆற்றில் குதித்து தற்கொைல செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.