கூடலூர் அருகே நான்கு வழிச்சாலையில் மீண்டும் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்படுமா? வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
கூடலூர் அருகே நான்கு வழிச்சாலையில் மீண்டும் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில் வாகன ஓட்டிகள் உள்ளனர்.
தேனி மாவட்டத்தில் தேவதானப்பட்டி, தேனி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம், கூடலூர் ஆகிய பகுதிகள் வழியாக குமுளிக்கு செல்ல புறவழிச்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இதில் கூடலூர் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் புறவழிச்சாலை பணிகள் முடிவடைந்துள்ளது. கூடலூர் வடக்கு தியேட்டர் பகுதியில் புறவழி இணைப்புச் சாலையில் ஒரு உயர்கோபுர மின்விளக்கும், தெற்கு மந்தை வாய்க்கால் பாலம் அருகே ஒரு உயர்கோபுர மின்விளக்கும் தேசிய நெடுஞ்சாலை நடுவில் அமைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெற்கு மந்தை வாய்க்கால் பாலம் அருகில் உள்ள உயர்கோபுர மின்விளக்கு கேரளாவிற்கு வாழைத்தார்கள் ஏற்றிச்சென்ற சரக்கு வாகனம் மோதி சேதம் அடைந்தது. தற்போது அங்கு உயர்கோபுர மின்விளக்கு இல்லாததால் அடிக்கடி விபத்து நடக்கிறது. எனவே தேசிய மந்தை வாய்க்கால் பகுதியில் மீண்டும் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும் என்று வாகன ஓட்டிகள், பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.