தீக்குளிப்பு சம்பவங்களை தடுக்க கலெக்டர் அலுவலகம் அருகே இரும்பு தடுப்புகள் அமைப்பு-போலீசார் நடவடிக்கை


தீக்குளிப்பு சம்பவங்களை தடுக்க கலெக்டர் அலுவலகம் அருகே இரும்பு தடுப்புகள் அமைப்பு-போலீசார் நடவடிக்கை
x

தீக்குளிப்பு சம்பவங்களை தடுக்க நெல்லை கலெக்டர் அலுவலகம் அருகே இரும்பு தடுப்புகளை போலீசார் அமைத்துள்ளனர்.

திருநெல்வேலி

தீக்குளிப்பு சம்பவங்களை தடுக்க நெல்லை கலெக்டர் அலுவலகம் அருகே இரும்பு தடுப்புகளை போலீசார் அமைத்துள்ளனர்.

தீக்குளிப்பு சம்பவங்கள்

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட் கிழமை அன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பொது மக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் அளித்து வருகின்றனர்.

அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களில் ஒரு சிலர் உடலில் மண்எண்ணெய் அல்லது பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபடும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

அவ்வாறு தீக்குளிக்கும் முயற்சிகளில் ஈடுபடுவோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்யும் நடவடிக்கையும் எடுத்து வருகிறார்கள். நேற்று முன்தினம் ஏர்வாடி பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் கந்துவட்டி கொடுமையால் தீக்குளிக்க முயற்சி செய்தனர்.

பேரிகார்டு

இதையடுத்து தீக்குளிப்பு முயற்சி சம்பவங்களை தடுக்கும் வகையில் நெல்லை மாநகர போலீஸ கமிஷனர் ராஜேந்திரன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். மாநகர கிழக்கு பகுதி போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் தலைமையில் போலீஸ் அதிகாரிகள் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் கொக்கிரகுளம் ரோட்டில் கலெக்டர் அலுவலக பிரதான நுழைவு வாயிலில் இருந்து இருபுறமும் 100 அடி தூரத்திற்கு சாலை ஓரத்தில் (பேரிகார்டுகள்) இரும்பு தடுப்புகள் அமைத்தனர். அங்கு கூடுதல் போலீசார் பணியில் ஈடுபட்டனர்.

கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனுக்கள் அளிக்க வந்த பொதுமக்கள் நேற்று முதல் இந்த பேரிகார்டுகள் வழியாக கடும் சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டார்கள். இனிமேல் கலெக்டர் அலுவலகத்திற்கு வருவோர் மற்றும் அவர்கள் கொண்டு வரும் பைகளில் என்ன இருக்கிறது? என்று சோதனையும் நடைபெறுகிறது.


Next Story