நவராத்திரி கொலு பொம்மை விற்பனை மந்தம்
திருவண்ணாமலையில் நவராத்திரி கொலு பொம்மை விற்பனை மந்தமாக உள்ளதாக வியாபாரிகள் தொிவித்தனர்.
திருவண்ணாமலையில் நவராத்திரி கொலு பொம்மை விற்பனை மந்தமாக உள்ளதாக வியாபாரிகள் தொிவித்தனர்.
கொலு பொம்மைகள்
நாடு முழுவதும் 9 நாட்கள் நடைபெறும் நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. இதனை முன்னிட்டு பெரும்பாலானோர் வீடுகளில் கொலு வைத்து வழிபாடு செய்வது வழக்கம். இந்த கொலுவில் சிவன், பார்வதி, அஷ்ட லட்சுமி, பெருமாள், குபேரன், பிள்ளையார், முருகன், யானை, சரஸ்வதி உள்ளிட்ட பல்வேறு கடவுள்களின் பொம்மைகள் உள்ளிட்ட பல்வேறு பொம்மைகள் வைக்கப்பட்டு இருக்கும்.
திருவண்ணாமலை நகரில் உள்ள சன்னதி தெருவில் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி கொலு பொம்மைகள் விற்பனை நடைபெற்று வருகிறது.
கடந்த சில நாட்களாக வியாபாரிகள் கடை அமைத்து கொலு பொம்மைகள் விற்பனை செய்து வருகின்றனர். அதில் புது ரகங்களிலும், பல்வேறு வண்ணங்களிலும், வடிவமைப்புகளிலும் தசாவதாரம், ராவணன் தர்பார், கும்பகர்ண சேனை, குபேரன் செட், முப்பெரும் தேவிகள், பெருமாள், கல்யாண செட்டு, காதுகுத்து செட்டு, வரவேற்பு செட்டு என விதவிதமான கொலு பொம்மைகளை விற்பனை செய்வதற்காக வைத்துள்ளனர்.
விற்பனை மந்தம்
இங்கு கொலு பொம்மைகள் சுமார் ரூ.100-ல் இருந்து ரூ.3 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இந்த ஆண்டு விற்பனை மந்தமாக உள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்து உள்ளனர். இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், ''பல ஆண்டுகளாக இதே பகுதியில் கடை வைத்து கொலு பொம்மை வியாபாரம் செய்து வருகிறோம். இந்த ஆண்டு கொலு பொம்மைகளின் வியாபாரம் மந்தமாக உள்ளது. நவராத்திரி விழா நாட்கள் இன்னும் உள்ளதால் பொம்மைகள் விற்பனை தொடர்ந்து நடைபெற வாய்ப்பு உள்ளது'' என்றனர்.