நவராத்திரி விழா நாளை தொடக்கம்


நவராத்திரி விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி கொலு பொம்மைகள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது.

புதுக்கோட்டை

நவராத்திரி விழா

இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் நவராத்திரி விழாவும் ஒன்றாகும். மக்களை துன்புறுத்தி வந்த மகிஷாசூரன், ஆதிபராசக்தி 9 நாட்கள் போரிட்டு 10-வது நாளில் அவனை வதம் செய்து வெற்றிகொண்டதாக நம்பப்படுகிறது. இதனை நினைவுகூரும் வகையில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் வீடுகள் மற்றும் அம்மன் கோவில்கள், சிவன் கோவில்களில் கொலு பொம்மைகள் வைத்து வழிபாடு நடத்தப்படும்.

9 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் விழாவில் தினமும் இரவில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இத்தகைய சிறப்பு வாய்ந்த நவராத்திரி விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. வீடுகள் மற்றும் கோவில்களில் கொலு அமைப்பதற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. கடைகளிலும் களிமண்ணால் செய்யப்பட்ட கொலு பொம்மைகள் விற்பனைக்காக வித, விதமாக வைக்கப்பட்டுள்ளன.

கொலு பொம்மைகள்

புதுக்கோட்டையில் கொலு பொம்மைகளை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். இதனால் கொலு பொம்மைகள் விற்பனை நேற்று மும்முரமாக நடைபெற்றது. செட் கணக்கிலும், தனித்தனி பொம்மைகளாகவும் பொதுமக்கள் வாங்கி சென்றனர். வருகிற 23-ந் தேதி ஆயுத பூஜை பண்டிகை கொண்டாடப்படுகிறது. 24-ந் தேதி விஜயதசமி பண்டிகையாகும்.

புதுக்கோட்டையில் கொலு வழிபாடு மனோன்மணியம்மன் கோவில், அரியநாச்சியம்மன் கோவில், பிரகதாம்பாள் கோவில் உள்ளிட்ட கோவில்களில் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. நவராத்திரி விழாவையொட்டி பெண்கள் விரதம் இருந்து அம்மனை பய, பக்தியுடன் வழிபாடு நடத்துவார்கள். கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.


Next Story