என் குரல் மிமிக்ரி செய்யப்பட்டுள்ளது - சர்ச்சை ஆடியோ குறித்து பொன்னையன் விளக்கம்
அதிமுகவை பற்றி பேசியதாக வெளியான சர்ச்சை ஆடியோ குறித்து அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை,
அதிமுகவின் முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவருமான பொன்னையன் அதிமுக தலைவர்களை விமர்சித்து பேசுவதாக தொலைபேசி உரையாடல் ஒன்றை பன்னீர்செல்வம் ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி நேற்று செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார். இது எடப்பாடி பழனிசாமி தரப்பினர் இடையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
இந்த நிலையில் இந்த சர்ச்சை ஆடியோ குறித்து அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,
அதிமுக நிர்வாகி கோலப்பன் உள்பட யாரிடமும் நான் பேசவில்லை. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி என் குரல் மிமிக்ரி செய்யப்பட்டுள்ளது. வெளியான ஆடியோ போலியானது. எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் மீது எனக்கு மிகப் பெரிய மரியாதை உள்ளது.
திமுக இனி ஆட்சிக்கு வரவே முடியாது என்ற அளவுக்கு எடப்பாடி பழனிசாமி புகழ் உயர்ந்துள்ளது. எடப்பாடி ஒரு அறிவு பெட்டகம், வழி நடத்த வேண்டிய நிலையில் அவர் இல்லை. பொதுக்குழு உறுப்பினர்களுக்கு பணம் கொடுத்ததாக ஓபிஎஸ் தரப்பு குற்றச்சாட்டில் உண்மை இல்லை. 98 சதவீத பொதுக்குழு உறுப்பினர்கள் ஈபிஎஸ்-க்கு ஆதரவாக உள்ளனர் என்று பொன்னையன் விளக்கமளித்துள்ளார்.