கள்ளத்தொடர்பை கைவிட மறுத்ததால்தலையில் கல்லை போட்டு பெண் படுகொலைகணவர் கைது


கள்ளத்தொடர்பை கைவிட மறுத்ததால்தலையில் கல்லை போட்டு பெண் படுகொலைகணவர் கைது
x
தினத்தந்தி 10 Jun 2023 12:30 AM IST (Updated: 10 Jun 2023 10:42 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

சேந்தமங்கலம்:

சேந்தமங்கலம் அருகே கள்ளத்தொடர்பை கைவிட மறுத்ததால் தலையில் கல்லை போட்டு பெண்ணை கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டார்.

கள்ளத்தொடர்பு

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே பேளுக்குறிச்சியில் உள்ள தேவேந்திர தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 61). கூலித்தொழிலாளி. இவர் கொல்லிமலை அடிவாரம் முள்ளுக்குறிச்சி பகுதியை சேர்ந்த சரசு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இதையடுத்து கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் 2 பேரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

இதனைத்தொடர்ந்து மாரியப்பன் 2-வதாக சின்னபொண்ணு (58) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சின்ராஜ் (31), கோபால் (20) என 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் 4 பேரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் சின்னபொண்ணுக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக தெரிகிறது. இதனை அறிந்த மாரியப்பன் மனைவியை கண்டித்ததுடன், கள்ளத்தொடர்பை கைவிடுமாறு கூறினார். ஆனால் சின்னபொண்ணு கள்ளத்தொடர்பை கைவிடாமல் இருந்து வந்ததாக தெரிகிறது.

கைது

இதனால் ஆத்திரத்தில் இருந்து வந்த மாரியப்பன் நேற்று அதிகாலை வீட்டில் தூங்கி கொண்டிருந்த சின்னபொண்ணுவின் தலையில் கல்லை தூக்கி போட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். பின்னர் மாரியப்பன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இதையடுத்து காலையில் தாய் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த மகன்கள் பேளுக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சின்ன பொண்ணுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் மறைந்திருந்த மாரியப்பனை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த 2-வது மனைவியை கணவன் கல்லால் தாக்கி படுகொலை செய்த சம்பவம் பேளுக்குறிச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story