கோபி அருகே பயங்கரம்: அரிவாளால் வெட்டி மூதாட்டி படுகொலை; தொழிலாளி கைது- செய்வினை வைத்ததால் கொன்றதாக வாக்குமூலம்
கோபி அருகே அதிகாலையில் மூதாட்டியை அரிவாளால் வெட்டி படுகொலை செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தார்கள். செய்வினை வைத்ததால் கொன்றதாக போலீசில் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கடத்தூர்
கோபி அருகே அதிகாலையில் மூதாட்டியை அரிவாளால் வெட்டி படுகொலை செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தார்கள். செய்வினை வைத்ததால் கொன்றதாக போலீசில் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மூதாட்டி
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள பொம்மநாய்க்கன்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட கே.மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மனைவி சரஸ்வதி (வயது 88). இவர்களுக்கு சுகுமார் என்ற மகனும், ராதா என்ற மகளும் உள்ளனர்
மகன் சுகுமார் கோபி அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றுவிட்டார். தற்போது சென்னையில் வசித்து வருகிறார். மகள் ராதா, கணவர் டாக்டர் நித்தியானந்தாவுடன் கோபியில் வசித்து வருகிறார்.
அரிவாள் வெட்டு
சரஸ்வதியின் கணவர் ராமசாமி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அதனால் கே.மேட்டுப்பாளையத்தில் உள்ள வீட்டில் சரஸ்வதி தனியாக வசித்து வந்தார்.
88 வயதானாலும் சரஸ்வதி அதிகாலையிலேயே எழுந்து வாசல் தெளித்து கோலமிடுவார். வழக்கம்போல் நேற்று அதிகாலையும் எழுந்து வாசல் தெளித்து கோலம் போடுவதற்காக வெளியே வந்தார்..
அப்போது அங்கு மறைந்து இருந்த மர்ம நபர் ஒருவர் திடீரென சரஸ்வதியை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் தலை, கழுத்து உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்தது.
கை பிளந்தது
மர்ம நபர் வெட்டியபோது சரஸ்வதி தடுக்க முயன்றுள்ளார். அப்போது அவரின் இடது கையில் அரிவாள் வெட்டு விழுந்ததில், கை இரண்டாக பிளந்தது. வலி தாங்க முடியாமல் அவர் அலறி துடித்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தார்கள். அதற்குள் அரிவாளால் வெட்டிய மர்ம நபர் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டார்.
உடனே இதுபற்றி மகள் ராதாவுக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தார்கள். அவர் பதறி அடித்தபடி அங்கு ஓடிவந்தார். பின்னர் தாயை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்சில் கோபியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
விசாரணை
தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்த டாக்டர்கள் சரஸ்வதி வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து உடல் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதற்கிடையே சம்பவம் பற்றி தகவல் அறிந்த கோபி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேலு தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயன் மற்றும் போலீசார் அங்கு சென்று சரஸ்வதியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.
அதன்பின்னர் உடல் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
காரணம் என்ன?
தினமும் அதிகாலை சரஸ்வதி எழுந்து வெளியே வந்து வாசல் தெளிப்பதை கொலையாளி ஏற்கனவே தெரிந்து வைத்துள்ளார். அதனால் இந்த கொலை திட்டமிட்டு செய்யப்பட்டது தெரிய வந்தது.
மேலும் கொலையாளி சரஸ்வதியின் நகைகளை பறித்து செல்லவில்லை. அதனால் நகைக்காகவும் இந்த கொலை நடக்கவில்லை என்று அறிய முடிந்தது. அதனால் முன்விரோதத்தில் இந்தகொலை நடந்ததா? என்று கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளியை தேடி வந்தார்கள்.
பஜனை பாடுவார்
விசாரணையில் சரஸ்வதியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் தொழிலாளி பாலுசாமி (48) என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவரை பிடித்து தீவிரமாக விசாரணை நடத்தினார்கள். அப்போது சரஸ்வதியை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.
போலீசில் அவர் அளித்த வாக்குமூலம் வருமாறு:-
என்னுடைய வீட்டின் அருகே சரஸ்வதியின் தோட்டம் உள்ளது. அங்குள்ள ஒரு கோவிலில் இரவு நேரத்தில் சரஸ்வதி பூஜை செய்து பஜனை பாடல்கள் பாடுவார். இது எனக்கு பெரும் தொந்தரவாக இருந்தது. எனக்கு திருமணம் ஆகாமல் இருப்பதற்கும், நான் வேலைக்கு செல்லாமல் இருப்பதற்கும் சரஸ்வதி எனக்கு செய்வினை செய்துவிட்டார். இதனால் நான் தூங்க முடியாமல் நிம்மதி இழந்துவிட்டேன்.
வெட்டிக்கொன்றேன்
இதன் காரணமாக எனக்கும், சரஸ்வதிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் ஆத்திரம் ஏற்பட்டு நான் அவரை கொலை செய்ய முடிவெடுத்தேன். அதன்படி நேற்று காலை வாசலுக்கு தண்ணீர் தெளிக்க சரஸ்வதி வருவார் என்று காத்திருந்தேன். நான்நினைத்தபடியே அவர் வந்தார். உடனே நான் கொண்டு சென்றிருந்த அரிவாளால் அவரை வெட்டினேன். இதில் அவர் இறந்து விட்டார்.
இவ்வாறு அவர் அந்த வாக்குமூலத்தில் கூறி உள்ளார்.
இதையடுத்து போலீசார் பாலுசாமியை கைது செய்தார்கள்.