கோத்தகிரி அருகே விவசாயிகளுக்கான பல்துறை ஒருங்கிணைப்பு கூட்டம்
கோத்தகிரி அருகே விவசாயிகளுக்கான பல்துறை ஒருங்கிணைப்பு கூட்டம்
கோத்தகிரி
கோத்தகிரி வட்டார தோட்டக்கலை, மலைப்பயிர்கள் துறை, வேளாண்மை தொழில் நுட்ப முகமை (அட்மா) திட்டத்தின் கீழ் கிசான் கோஸ்தீஸ் மற்றும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட பல்துறை ஒருங்கிணைப்பு கூட்டம் நடுஹட்டி ஊராட்சி குண்டாடா கிராமத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கோத்தகிரி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் ஐஸ்வர்யா தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் அனிதா, நடுஹட்டி ஊராட்சித் தலைவர் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதகை வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானி முனைவர் சிந்தியா பெர்னாண்டஸ் கலந்து கொண்டு காய்கறி மற்றும் தேயிலை பயிர்களில் பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாட்டு முறைகள் குறித்தும், வேளாண் அறிவியல் நிலையத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் பயிற்சிகள் குறித்தும் விளக்கிப் பேசினார். வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் பாலன் மானிய திட்டங்களில் வழங்கப்படும் டிராக்டர், பவர் டிரில்லர், பவர் வீடர் மற்றும் தேயிலை அறுவடை எந்திரங்கள் குறித்து விளக்கினார். உதவி மண் ஆய்வு கூட வேளாண் அலுவலர் சாய்நாத் மண் மாதிரி சேகரிப்பு முறைகள் மற்றும் தமிழ் மண்வளம் என்கிற வலை தளத்தின் பயன்கள் குறித்து விளக்கினார். தோட்டக்கலை அலுவலர் தயானந்தன் தோட்டக்கலை மானிய திட்டங்கள் குறித்து விளக்கினார். கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். முன்னதாக உழவர் உற்பத்தியாளர் குழு தலைவர் தேவராஜ் அனைவரையும் வரவேற்றார். முடிவில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரசாந்த் நன்றி கூறினார்.