மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்; டிரைவர் பலி
காரையூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் ேநருக்கு நேர் மோதிய விபத்தில் டிரைவர் பலியானார். மனைவி, மகன்கள் படுகாயமடைந்தனர்.
காரையூர்:
திருமண விழாவிற்கு...
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே செவலூரை சேர்ந்தவர் முத்தழகு மகன் சரவணன் (வயது 35). டிரைவர். இவரது மனைவி அனிதா, மகன்கள் தர்ஷன் (6), அட்சயன் (2). இவர், அரசமலை அருகே சாத்தனூரில் நடைபெற்ற முப்பிலி கருப்பர்கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு தனது அக்காள் தமிழரசி வீட்டுக்கு வந்தார்.
பின்னர் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டு வல்லத்திராகோட்டையில் நடைபெற இருந்த உறவினர் திருமண விழாவிற்கு சரவணன், அவரது மனைவி, மகன்கள் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
டிரைவர் பலி
அரசமலையிலிருந்து-புதுக்கோட்டை செல்லும் சாலையில் சித்தூர் பாலம் அருகே வந்த போது, அந்த வழியாக அடையாளம் தெரியாதவர் வந்த மோட்டார் சைக்கிளும், சரவணன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் தலையில் படுகாயமடைந்த சரவணன் சம்பவ இடத்திலேயே பலியானார். அனிதா, தர்ஷன், அட்சயன் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
வழக்குப்பதிவு
இதைப்பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காரையூர் போலீசார் சரவணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த சரவணன் 2 மாதங்களுக்கு முன்பு தான் சிங்கப்பூரிலிருந்து சொந்த ஊருக்கு வந்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.