ஹெல்மெட் விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் ஊர்வலம்
மயிலாடுதுறையில் ஹெல்மெட் விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடந்தது.
மயிலாடுதுறை;
மயிலாடுதுறையில் மாவட்ட போலீசார் மற்றும் மாவட்ட உணவு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் ஹெல்மெட் குறித்த விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடந்தது. போலீஸ் சூப்பிரண்டு நிஷா தலைமை தாங்கி, கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட உணவு உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் செந்தில்வேல், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல், உதவி போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிட்டப்பா அங்காடி முன்பு புறப்பட்ட மோட்டார் சைக்கிள் வாகன அணிவகுப்பு ஊா்வலம் கச்சேரி சாலை, கண்ணாரத் தெரு, பட்டமங்கலத்தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கிட்டப்பா அங்காடியை அடைந்தது. முன்னதாக ஓட்டல், பேக்கரி தொழிலாளர்கள் 50 பேருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா இலவசமாக ஹெல்மெட் வழங்கினார். தொடர்ந்து ஹெல்மெட் வாங்குபவர்களுக்கு மயிலாடுதுறை நகரில் 20 சதவீதம் ஹெல்மெட் விலையில் தள்ளுபடி செய்வது என்றும், ஓட்டல்கள் மற்றும் பேக்கரிகளில் ஹெல்மெட் அணிந்து வருபவர்களுக்கு விற்பனை விலையில் 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று உணவகங்கள் உரிமையாளர் சங்கத்தினர் மற்றும் மோட்டார் சைக்கிள் விற்பனை முகவர்கள் சங்கத்தினர் அறிவித்தனர்.