மாமல்லபுரம் அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த குரங்குகள் கூண்டு வைத்து பிடிக்கப்பட்டன; வனத்துறையினர் நடவடிக்கை
மாமல்லபுரம் அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த குரங்குகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர்.
குரங்குகள் அச்சுறுத்தல்
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தை அடுத்த எச்சூர் கிராமத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காடுகளில் இருந்து 10 குரங்குகள் இடம் பெயர்ந்து இந்த பகுதிக்கு வந்தன. நாளடைவில் இனப்பெருக்கம் செய்து 30 குரங்குகளாக அதிகரித்து விட்டன.
இந்த குரங்குகள் எச்சூர் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து வீட்டில் உள்ள தின்பண்டங்களை தூக்கி செல்வது, பாத்திரங்களை தூக்கி சென்று வயல்வெளிகளில் வீசுவது போன்ற சேட்டைகளில் ஈடுபட்டன. அதேபோல் அங்குள்ள பலரது வீடுகளில் முன் பகுதியில் உள்ள தென்னை, மா, பலா, வாழை, கொய்யா மரங்களில் உள்ள காய்களை கடித்து சேதப்படுத்தி வந்தன. அந்த பகுதி மக்கள் அதனை பட்டாசு வெடி சத்தம் மூலம் அங்கிருந்து விரட்ட முயற்சித்தனர்.
ஆனால் அங்கிருந்து குரங்குகள் வேறு இடத்திற்கு இடம் பெயராமல் தொடர்ந்து எச்சூர் மக்களை பல்வேறு வகைகளில் அச்சுறுத்தி வந்தன. குச்சி எடுத்து அதனை விரட்டுபவர்களை கடித்து துன்புறுத்துவது போன்ற அட்டகாச செயல்களில் ஈடுபட்டு வந்தன.
கூண்டு வைத்து பிடித்தனர்
நாளுக்கு நாள் குரங்குகளின் தொல்லை அதிகரித்ததால் அவற்றை கூண்டு வைத்து பிடித்து காட்டில் விட வேண்டும் என்று கிராம மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்தனர். பிறகு வனத்துறையினர் குரங்குகளை பிடிக்க 3 கூண்டுகளுடன் வந்தனர். அவர்களுக்கு குரங்குகளை பிடிக்க அந்த கிராம மக்கள் 10 டஜன் வாழை பழம், ஒரு மூட்டை வேர்க்கடலை வாங்கி கொடுத்தனர்.
பிறகு கூண்டுகளுக்குள் வேர்க்கடலை, வாழை பழம் வைத்து ஆசை காட்டி, குரங்குகளை லாகவமாக வரவழைத்து கூண்டுக்குள் பிடிபட்ட குரங்குகளை வனத்துறையினர் இள்ளலூர் காட்டில் கொண்டு போய் விட்டனர். கடந்த 2 ஆண்டுகளாக குரங்குகளால் அவதிப்பட்ட அந்த கிராம மக்கள் அவை கூட்டமாக ஒரே நேரத்தில் பிடிபட்டதால் நிம்மதி அடைந்தனர்.