இளம்பிள்ளையில்ஆன்லைன் மூலம் சேலைகள் விற்று ரூ.30 லட்சம் மோசடிதந்தை- அண்ணனுடன் பெண் கைது
சேலம்
இளம்பிள்ளையில் ஆன்லைன் மூலம் சேலைகள் விற்று ரூ.30 லட்சம் மோசடி செய்ததாக தந்தை- அண்ணனுடன் பெண் கைது செய்யப்பட்டார்.
புகார் மனு
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை சவுடேஸ்வரி நகரை சேர்ந்தவர் கார்த்திக். அவரது மனைவி சுபா (வயது 33). இவர் சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமாரை சந்தித்து புகார் மனு ஒன்று கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறி இருப்பதாவது:-
நாங்கள் இளம்பிள்ளையில் சேலைகளை உற்பத்தி செய்து வியாபாரம் செய்து வருகிறோம். எங்களது கடை அருகேயே எனது கணவரின் அண்ணன் அருண் என்பவரும் பட்டுசேலைகளை விற்பனை செய்து வருகிறார்.
எங்களது 2 பேரின் கடைகளிலும் இளம்பிள்ளையை சேர்ந்த ஆறுமுகம் (59) என்பவரின் மகள் உமாமகேஸ்வரி (23) ஆன்லைன் மூலம் சேலை விற்பனை செய்யும் பிரிவில் கடந்த 4 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார்.
மீட்டு தர வேண்டும்
இந்த நிலையில் உமாமகேஸ்வரி ஆன்லைன் மூலம் சேலைகளை வாடிக்கையாளர்களிடம் விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தை பெறுவதற்காக எனது வங்கி கணக்கை கொடுக்காமல் மாறாக உமாமகேஸ்வரி அண்ணன் மாணிக்கம் (32) என்பவரது வங்கி கணக்குக்கு ஆன்லைன் மூலம் அனுப்ப சொல்லியிருக்கிறார். பின்னர் அந்த பணத்தை எடுத்து தங்களுக்குரிய வங்கிகளில் செலுத்தியுள்ளார்.
இந்த விவரங்களை வாடிக்கையாளர்கள் மூலம் தெரிந்து கொண்டேன். கடந்த 2021-ம் ஆண்டு முதல் கடந்த பிப்ரவரி மாதம் வரை உமாமகேஸ்வரி வேலை செய்த வரைக்கும் எனது கடையிலும், எனது கணவரின் அண்ணன் கடையிலும் மொத்தமாக சேர்த்து ரூ.30 லட்சம் வரை மோசடி செய்துள்ளார். எனவே ஆறுமுகம், அவரது மகன் மாணிக்கம், மகள் உமாமகேஸ்வரி ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
3 பேர் கைது
இதுதொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட குற்றப்பிரிவுக்கு போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் உத்தரவிட்டார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன் விசாரணை நடத்தினார்.
இதில் சுபா மற்றும் அருண் ஆகியோரின் கடைகளில் இருந்து ஆன்லைன் மூலம் சேலைகள் விற்று உமாமகேஸ்வரி, ஆறுமுகம், மாணிக்கம் ஆகியோர் ரூ.30 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.